Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 4, 2016

குறை!-சிறுகதை


சேலம் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பிரதாப், இப்போது கடலூரிலுள்ள ஒரு அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். அவனுடைய தந்தையாருக்கு கடலூரில் பணிமாற்றம் செய்யப்பட்டதால், அவனும் கடலூருக்கு வர வேண்டியதாயிற்று.
அவனுடைய தாயார் பிரதாப்பிடம், ""மகனே, நல்ல நண்பனிடம் சேர்'' என்றாள்.
அவனும் தன் தாய்ச்சொல்லை அப்படியே ஏற்றான்.
அவன் ஆறாம் வகுப்பு படித்தான். அவனுடன் படித்த அபிஷேக் என்பவனை அவன் நண்பனாகப் பெற்றான். இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்தனர்.
வகுப்பில் கூட பிரதாப் அருகில்தான் அபிஷேக் அமர்ந்திருப்பான். உணவு வேளையில் இருவரும் ஒன்றாக அமர்ந்து, ஒருவர் கொண்டு வந்திருக்கும் உணவை இன்னொருவர் மாற்றி உண்டனர். பள்ளி விட்டு வீட்டுக்குச் செல்லும்போதும், இருவரும் ஒன்றாகத்தான் செல்வர்.
ஒருவன் பள்ளிக்கு வரவில்லை யென்றால் இன்னொருவனும் வரமாட்டான். இப்படி பிரதாப், அபிஷேக் இருவரும் நகமும், சதையும் போல இணைந்தே இருந்தனர்.
தன்னைப் போன்றே நல்ல பழக்கங்கள் கொண்ட அபிஷேக் தனக்கு நண்பனாகக் கிடைத்ததை எண்ணி பிரதாப் பெரிதும் மகிழ்ந்தான். அவனைப் பற்றித் தன் பெற்றோரிடம் பெருமையாகக் கூறினான்.
""அபிஷேக்கைப் போல் எனக்கு ஒரு நண்பன் இருந்து விட்டால்போதும், எனக்கு வாழ்க்கையில் வேறு எதுவும் வேண்டாம்,'' என்று அவனை வானளாவப் புகழ்ந்தான் பிரதாப்.
நல்லபழக்கங்களைக் கொண்டிருந்த அபிஷேக்கிடம் துரதிருஷ்டவசமாக சில தீய பழக்கங்கள் ஒட்டிக் கொண்டன.
ஒருநாள் வகுப்பில் தன் அருகில் அமர்ந்திருந்த மாணவனின் பேனாவை அவனுக்குத் தெரியாமல் எடுத்தான் அபிஷேக். அதை பிரதாப் பார்த்து விட்டான்.
அவனை தனிமையில் அழைத்து, ""அபிஷேக், திருடுவது மிகவும் கெட்ட பழக்கம். உன் அருகில் அமர்ந்திருந்த மாணவன் ஒருவனுடைய பேனாவைத் நீ எடுத்ததை நான் பார்த்தேன். அதை அவனிடம் திருப்பிக் கொடுத்து விடு,'' என்றான்.
""பிரதாப், இதெல்லாம் எனக்கு சகஜம். அதை நான் திருப்பித் தரமாட்டேன்,'' என்றான்.
பிரதாப் அமைதியாக இருந்து விட்டான்.
இன்னொரு நாள் அபிஷேக் தன்மேல் தவறை வைத்துக் கொண்டு, இன்னொரு மாணவனை அடித்து விட்டான். அதையும் பிரதாப் பார்த்து விட்டு தட்டிக்கேட்டான்.
""யாரையாவது அடிக்கவில்லையென்றால் எனக்குத் தூக்கமே வராதுடா,'' என்று பிரதாப் இடம் கூறிவிட்டான் அபிஷேக்.
நாளடைவில் அபிஷேக் மேல் பிரதாப்புக்கு வெறுப்பு தோன்ற ஆரம்பித்துவிட்டது. அதனால் அவனிடம் சேர்வதை பிரதாப் நிறுத்திக் கொண்டான்.
தன் பெற்றோரிடம், ""அபிஷேக்கைப் போன்று ஒரு தீய நண்பன் உலகில் வேறு யாருமே இல்லை. எனவே, அவன் இனி எனக்கு நண்பன் இல்லை,'' என்று கூறினான்.
""பிரதாப், ஒருநாள் உன் நண்பனைப் பற்றி என்னிடம் வானளவு புகழ்ந்தாய். இன்று ஏன் அவனைத் திட்டுகிறாய்?'' என்று கேட்டாள் அம்மா.
""அம்மா அப்போது அவன் நல்ல பழக்கங்கள் உடையவனாகத்தான் இருந்தான். இவன் இப்படியே நல்லவனாக இருப்பான் என்றுதான் அவனோடு நான் நட்பு கொண்டேன். ஆனால், இன்றோ அவன் இன்னொருவனுடைய பேனா வைத் திருடுகிறான். தவறு தன்மேல் இருந்தும், அப்பாவியான இன்னொரு பையனை அடிக்கிறான். அதனால் அவனிடமிருந்து நான் பிரிந்து விட்டேன். இனி அவன் எனக்கு நண்பன் இல்லை. இனி அவன் யாரோ? நான் யாரோ?'' என்று பொரிந்து தள்ளினான்.
""நீ மனமுவந்துதான் அவனை நண்பனாக ஏற்றுக்கொண்டாய். அவன் அப்போது நல்ல பழக்கங்கள் உடையவனாக இருந்தான். பிறகு ஒரு சில குறைகள் அவனிடம் தோன்றியிருக்கின்றன. அதனால் நீ அவனுடன் விரோதம் கொண்டு அவனைப் பிரியக்கூடாது. அவனுடைய சிறிய குறைகளை நீ பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அவன் குறைகளை அன்பாக எடுத்துக் கூறு. அவன் திருந்திவிடுவான்,'' என்றாள் பிரதாப்பின் தாயார்.
தன் தவறை உணர்ந்தான் பிரதாப்.
மறுநாள் பிரதாப் வகுப்புக்குச் சென்று, அபிஷேக்கைச் சந்தித்து அன்பாக அறிவுரை கூறினான். அவனும் தன் குறைகளைத் திருத்திக் கொண்டான். இருவரும் பழையபடியே இணை பிரியா நண்பர்களாயினர்.
குட்டீஸ் உங்கள் நண்பர்களிடமும் ஒரு சில குறைகள் இருந்தால், அவர்களுக்கு, அன்பாக அறிவுரை கூறுங்கள். அவர்களும் திருத்திக் கொள்வர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.