Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 5, 2016

மாப்பிள்ளை அவர் தான்.. ஆனா சட்டை என்னோடது!


'மாப்பிள்ளை அவர் தான்... ஆனா, அவரு போட்டிருக்கிற சட்டை என்னோடது...' எனச் சொல்லி, எல்லா இடங்களிலும் தானே மாப்பிள்ளை ஆக வேண்டும் என்ற ஆசையை, 'படையப்பா' படத்தில் வெளிப்படுத்துவார் ரஜினி. அதைப் போல, 'அந்தக் கட்சிக்காரங்க தான் போட்டியிடுறாங்க... ஆனா, அவங்க போட்டியிடுற சின்னம் எங்க கட்சியோடது... நாங்க தான், 234 தொகுதிகளிலும் வெற்றி பெறணும்...' என, சொல்லாமல் சொல்கிறார், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா.

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயங்கிய, த.மா.கா., தமிழக வாழ்வுரிமை கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி போன்றவை, 'கழற்றி' விடப்பட்டுள்ளன.ஏற்கனவே சொன்னது போல், லோக்சபா தேர்தலில், 37 இடங்களை அள்ளி, அதாவது, 40 சதவீத ஓட்டுகளை அள்ளியதால் கனன்ற ஆசை, இப்போது தீயாக மாறி இருக்கிறது. சட்டசபை தேர்தலிலும், பெரும்பான்மை பெற்று சாதிக்க வேண்டும் என்ற இலக்கில், எதிர் கூட்டணிகளைப் பற்றிக் கவலைப்படாமல், அ.தி.மு.க., தனித்து களம் இறங்கி உள்ளது. அதனால் தான், தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட எந்த பெரிய கட்சியையும் கூட்டணியில் சேர்க்கவில்லை. அவர்கள் தொகுதி பங்கீடு பேரத்தில் தொடங்கி, அனைத்து வகையிலும் பிரச்னை செய்வர் என்பது அவர் கணக்கு. அ.தி.மு.க., கூட்டணியில் இணையும் முடிவில், தமிழக வாழ்வுரிமை கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆகியவை, ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தன.

ஆனால், கூட்டணியில் சேர விரும்பிய, த.மா.கா., தலைவர் வாசன், தொகுதி பங்கீட்டை முடிவு செய்யாமல், ஆதரவு அறிக்கை வெளியிட முடியாது என கூறிவிட்டார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், அ.தி.மு.க., பொதுச் செயலரை சந்தித்து, ஆதரவு தெரிவித்ததுடன், ஐந்து சீட் கேட்டார். அவருக்கும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும்

என, நிபந்தனை விதிக்கப்பட்டது. அவர் தயங்கவே, உடன்பாடு ஏற்படவில்லை.அகில இந்திய பார்வர்டு பிளாக்கட்சி, கடந்த முறை, அ.தி.மு.க., கூட்டணியில், ஒரு இடத்தில், சிங்கம் சின்னத்தில் போட்டியிட்டது. இம்முறை கூடுதல் சீட் கேட்டதுடன், இரட்டை இலையில் நிற்க முடியாது என, கூறி விட்டனர். இதன் காரணமாக அக்கட்சி, 'கழற்றி' விடப்பட்டுள்ளது.



இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற, அ.தி.மு.க.,வின் நிபந்தனையை ஏற்க மறுத்ததால், இம்மூன்று கட்சி களுக்கும் இடமில்லை என, கைவிரித்து விட்டார், ஜெயலலிதா.கடந்த முறை, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட, இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர், மீண்டும் அதே சின்னத்தில் நிற்க முன்வந்துள்ளதால், அவர்களுக்கு மட்டும் இடம் கிடைத்துள்ளது.

'சீட்' கிடைக்கும் நம்பிக்கையில், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உட்பட பல்வேறு அமைப்புகள், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்தன. அதில், ஒரு சில கட்சிகளுக்கு மட்டுமே, 'சீட்' வழங்கப்பட்டுள்ளது.மனித நேய மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து, மனிதநேய ஜனநாயக கட்சியை துவக்கிய, தமிமுன் அன்சாரிக்கு, இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முக்குலத்தோர் புலிப்படை தலைவரான, நடிகர் கருணாசுக்கு, ஒரு சீட் தரப்பட்டுள்ளது.

இந்தக் கணக்குடன் நேற்று, அ.தி.மு.க., 227 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள், ஏழு தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவாகி, அதன்படி, பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.ஆனால், இதில் மாற்றம் இருக்காது என்று கூற முடியாது. ஏனெனில், கடந்த தேர்தலில், இதேபோல், அ.தி.மு.க., சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின், தே.மு.தி.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், கூட்டணியில் இடம் பெற்றன; அவை இரண்டுமே, தத்தமது சின்னத்தில் போட்டியிட்டன.

அதே பாணியில், இம்முறையும் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில், தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி போன்றவை நம்பிக்கையுடன் காத்திருக்கின்றன. நம்பிக்கை, 'சீட்' பெற்றுக் கொடுக்குமா?
அவசர ஆலோசனை:அ.தி.மு.க., கூட்டணியில் இணைய வேண்டும் என, எங்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தைக் கூட்டி அதில் முடிவெடுத்துத்தான், அக்கட்சித் தலைவர் ஜெயலலிதாவை சந்தித்தோம். அவரும், எங்கள் கட்சிக்கு 'சீட்' ஒதுக்குவதாக கூறினார்.அந்த நம்பிக்கையில் தான் காத்திருந்தோம். தொகுதி ஒதுக்கப்படாதது, வருத்தம் தான். இருந்தாலும், இந்த பட்டியல் மாற்றத்துக்குரியது தான் என்பதால், காத்திருக்கிறோம். சீட் கொடுக்கப்படாததால், கட்சியின் அவசர செயற்குழுவை கூட்டியிருக்கிறேன். எப்படியிருந்தாலும், முதல்வர் எங்கள் இயக்கத்தை புறக்கணிக்க மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது.

வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.