Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 20, 2016

இவர்களுக்காவும் பேசுபவர்தான் எனது வேட்பாளர்!#whoismycandidate


இந்த ஹாஷ் டேக், ட்விட்டரில் டிரண்டிங்கில் இருக்கிறது... நம்முடைய வேட்பாளர் எப்படியானவராக இருக்க வேண்டும் என்பது இதன் உட்பொருளாக இருந்தாலும்,  இதன் நேரடி பொருள்,  ‘யார் எனது வேட்பாளர்...?’.

அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்தவுடன், உங்களுக்கு நிச்சயம் தெரிய வரும், யார் உங்களது வேட்பாளர் என்று. மே 20, யார் உங்களது சட்டமன்ற உறுப்பினர் என்றும், யார் உங்களது முதல்வர் என்றும், உங்களுக்கு தெரிய வந்திருக்கும். ஆனால், யார் வேட்பாளர், யார் சட்டமன்ற உறுப்பினர், யார் முதல்வர் என்றே தெரியாமல், நாம் வாழும் இதே தமிழகத்தில் ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது... ஆம், உண்மைதான். சுதந்திரமடைந்து பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு, இந்த ஒரு கட்டுரையின் மூலம் எந்த தீர்வையும் கொண்டு வந்துவிட முடியாது என்பது எனக்கு நன்கு தெரியும். ஆனால், அவர்களின் அவலத்தை, அவர்கள் சந்திக்கும் சிக்கல்களை, அவர்களின் தேவையை,  உங்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதை எழுதுகிறேன். ஏனெனில், அவர்களுக்காகவும் நீங்கள்தான் பேசியாக வேண்டும்.

ரஜினியும் கமலும் இங்கு தவறாமல் தேர்தல் வேலை பார்ப்பார்கள்:




ஆம். இங்கு ஒவ்வொரு தேர்தலின் போதும், ரஜினியும், கமலும் தவறாமல் தேர்தல் வேலை பார்ப்பார்கள். நீங்கள் புருவத்தை உயர்த்த வேண்டாம். இவை சின்னராசு வைத்திருக்கும் கழுதையின் பெயர்கள். தீவிர சினிமா காதலரான சின்னராசு,  தருமபுரி மாவட்டம், பென்னகரம் தொகுதியில் இருக்கும் கோட்டூர்மலை அடிவாரத்தில் வசிக்கிறார். அவரது கழுதைகள்தான் ஒவ்வொரு தேர்தலின் போதும், வாக்கு இயந்திரத்தை தூக்கி கொண்டு பழங்குடிகள் வசிக்கும் மலைகிராமங்களான கோட்டூர்மலை, ஏரிமலை, அலக்கட்டு ஆகிய ஊர்களுக்கு செல்லும்.  தேர்தல் ஆணையம் கடைக்கோடி வாக்களனையும், ஜனநாயக கடமையை செய்ய வைக்க, மிகுந்த சிரத்தை எடுத்து, இவை அனைத்தையும் செய்யும். அந்த மக்களும் வாக்களிப்பார்கள். இந்திய ஜனநாயகத்தோடு, அந்த மக்களுக்கு இருக்கும் ஒரே தொடர்பு தேர்தல் மட்டும்தான். நமக்கெல்லாம் வாக்களிப்பது பெருமையோ இல்லையோ, அந்த மக்கள் திருவிழாவிற்கு செல்வது போல் புது துணி உடுத்தி, மகிழ்வாக வந்து வாக்களிப்பார்கள். ஏனெனில், அவர்கள் சக மனிதர்களாக பார்க்கப்படுவது, மதிக்கப்படுவது அந்த ஒரு  நாள் மட்டும்தான்.

கம்யூனிஸ்ட்டுகளை தவிர வேறு யாரும் சிரமப்பட்டு, அவ்வளவு தூரம் நடந்து  வாக்கு கேட்க செல்லமாட்டார்கள். அனைத்து சமூகத்தின் நம்பிக்கையை பெற வேண்டும் என்பதை விட, தேர்தல் வெற்றி மட்டும்தான் முக்கியம் என்பது இங்கு பல கட்சிகளுக்கு முக்கியமாக இருப்பதால், அவர்களால் அந்த பகுதிகள் புறக்கணிக்கப்படும். அதனால், அங்குள்ள மக்களுக்கு மற்ற வேட்பாளரையும் தெரியாது, சின்னங்களையும் தெரியாது. அனைத்து வாக்குகளும் கம்யூனிஸ்ட்டுகளுக்கே செல்லும். இப்போது சில காலமாக, அங்குள்ள மக்கள் சமவெளிக்கு வர துவங்கி உள்ள காரணத்தினால், மற்ற கட்சிகளின் அறிமுகமும் கிடைத்து இருக்கிறது.  

'கட்டுரையின் முன்னுரையில், இங்கு ஒரு சமூகத்துக்கு, வேட்பாளரையும் தெரியாது, முதல்வரையும் தெரியாது என்றீர்கள். ஆனால், அடுத்த பத்தியில், முரணாக எழுதுகிறீர்கள்.  அது தான் அவர்களுக்கு வேட்பாளரையும் தெரிகிறது, தேர்தலில் வாக்கும் அளிக்கிறார்களே... வேறு என்னதான் வேண்டும்...? ' என்கிறீர்களா. வேட்பாளர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர், இவர்களை தெரிவது என்பது  ஒரு மனிதராக தெரிவதல்ல... நமக்கு ஒபாமாவை நன்கு தெரியும். ஆனால், அவருக்கும் நமக்கும் என்ன தொடர்பு...? ஒரு வேட்பாளரை தெரிவது, சட்டமன்ற உறுப்பினரை தெரிவது என்பது, அவர் பொறுப்புகள் நமக்கு தெரிவது. அதாவது, அவர் வெற்றி பெற்றால், நமக்கு இதையெல்லாம் செய்வார் என்று தெரிவது... நம் முதல்வர் நமக்கு நல்ல சாலை வசதியை, குடிநீரை, மருத்துவத்தை தருவார் என்று தெரிவது. ஆனால், இந்த மக்களுக்கு இது போல் எதையும் தெரிவதில்லை. அவர்களுக்கு இதையெல்லாம் தெரிவிக்க வேண்டும் என்ற எந்த விருப்பமும், அரசியல் தலைவர்களுக்கு இல்லை.

ஓ.. இவ்வளவு தானா... நமக்கு மட்டும்தான் இந்த தலைவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்...? என்பது உங்களின் இயல்பான கேள்வியாக இருக்கும். ஆம். சரிதான். ஆனால், நமக்கு குறைந்தபட்சம் நமது உரிமைகள் தெரிந்து இருக்கிறது. நமக்கு அடிப்படை வசதிகள் இல்லாதபோது, அதிகாரிகள், அரசியல் தலைவர்களிடம் சென்று முறையிட முடிகிறது. ஆனால், இது எதுவுமே சுதந்திரம் பெற்று இத்தனை தசாப்தங்கள் கழித்தும் தெரியாத அந்த பழங்குடிகளுக்கு , எல்லாருக்குமான இந்த அரசு,  என்ன செய்திருக்கிறது.



இது ஏதோ, இந்த மூன்று மலைக் கிராமங்களின் பிரச்னை அல்ல. தமிழகத்தில் உள்ள  சாலை வசதியற்ற மலைகளில் வசிக்கும்  மலையாளிகள், குரும்பர்கள், இருளர்கள், அதியன், காடர், குரிச்சான், மலை வேடன், மலசர்  என 36 விதமான பட்டியல் பழங்குடிகளின் பிரச்னை. இவர்களுக்கு இந்த அரசுகள் காலங்காலமாக துரோகம் இழைத்து வருகிறது. அவர்களை பொது சமூகத்தில் கலக்க செய்யாமல் வைத்திருக்கிறது. இவர்களுக்கு செய்யும் துரோகமானது, குழந்தைகள் மீது தொடுக்கும் தாக்குதலுக்கு சமம். ஆம், எதிர் வினையாற்ற தெரியாதவர்கள் அவர்கள்.

பழங்குடிகளுக்காக இந்த அரசுகள் என்ன செய்திருக்கிறது...?

அண்மையில், ‘சுதந்திர இந்தியாவில் ஆதிவாசிகளின் அவலகரமான நிலைமை'  என்ற தலைப்பில் சென்னையில் ராமசந்திர குஹா ஆற்றிய உரையை கேட்க நேர்ந்தது. அதில், ஒரு விஷயத்தை குஹா விவரித்தார்.

அது,   நேரு வழிநடத்திய இடைக்கால அரசு அரசமைப்பு சட்டக்குழுவின்  ‘குறிக்கோள் தீர்மானங்கள்’ விவாதத்தில் உரையாற்றிய  பழங்குடியினத் தலைவர் ஜெய்பால் சிங், “நெடுங்காலமாக ஒரு குழு மோசமாக இந்தியாவில் நடத்தப்பெற்றது என்றால் அது நாங்கள்தான். என் மக்களின் வரலாறு முழுக்கத் தொடர் சுரண்டல், தங்களின் இருப்பிடத்தை விட்டு ஆதிவாசிகள் அல்லாத இந்திய குடிகளால் வெளியேற்றப்படுவது ஆகியவற்றால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வரலாறு நெடுக போராட்டங்கள், குழப்பங்கள் நிரம்பிக் கிடக்கின்றன என்றாலும், சுதந்திர இந்தியா சமமான வாய்ப்புகளை  எங்களுக்கும் வழங்கி யாரையும் புறக்கணிக்காமல் செயல்படும் என்று நம்புகிறேன்....” - இது 1946 ல் ஆற்றிய உரை.  உங்கள் மனதில் கைவைத்து சொல்லுங்கள், நாம் அவர்களுக்கு உரிய வாய்ப்பை வழங்கி இருக்கிறோமா...?  என்றாவது வெற்றி பெற்ற சட்டமன்ற/ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடன் கலந்து, அவர்களை புரிந்து கொண்டு, அவர்கள் பிரச்னையை தீர்க்க முயற்சித்து இருக்கிறார்களா...?

கடந்த ஆண்டு டேராடூனில், இந்திய வனப் பணியாளர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட  பழங்குடிகள், தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை பேச எத்தனித்த போது, மூத்த வன அதிகாரிகள் அவர்களை பேச விடாமல் தடுத்து இருக்கிறார்கள். அதாவது, நாம் அவர்கள் பேசுவதை கூட கேட்க தயாராக இல்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, தமிழகத்தில் அம்மா சிறப்பு திட்ட முகாம் நடைப்பெற்றது. ‘AMMA' - இதற்காக அரசு கொடுத்த விளக்கம் Assured Maximum Service to Marginal People in All Villages. அதாவது,  அதிகபட்ச சேவையை அனைத்து கிராமங்களிலும் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு வழங்குவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமென்று சொல்லப்பட்டது.  தமிழகத்தில் எத்தனை மலைக் கிராமங்களில் இந்த முகாம் நடைபெற்று இருக்கிறது... அதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட நடவடிக்கை என்ன...? விடை பெரிய பூஜ்யமாகதான் இருக்கும்.  இதில் பெருங்கொடுமை என்னவென்றால்... இந்த பழங்குடிகள், அதுவும் குறிப்பாக தமிழகத்தில் வாழும் பழங்குடிகள், தமது உரிமை என்னவென்றே தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.



எனது வேட்பாளர் வாக்கு வங்கி அரசியல் செய்பவராக இருக்க கூடாது:

பழங்குடிகள், தமிழகமெங்கும் சிதறி இருக்கிறார்கள். எந்த தொகுதிகளிலும் தேர்தல் வெற்றிகளை தீர்மானிக்க கூடியவர்களாக இல்லை. அவர்கள் ஓட்டு இல்லாமலேயே நாம் வெற்றி பெற்றுவிட முடியும் என்ற வேட்பாளர்களின் மிதப்புதான், பழங்குடிகள் முன்னேற்றத்தை தடுக்கிறது. எனது  வேட்பாளர் வெறும் வாக்கு வங்கி அரசியல் செய்பவராக மட்டும் இருக்க கூடாது. சமூகத்தில் சிறு எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்களையும் சந்தித்து அவர்கள் பிரச்னைக்கும் குரல் கொடுப்பவராக இருக்க வேண்டும்,  சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் பழங்குடிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடுபவராக இருக்கவேண்டும்... இதுதான் #whoismycandidate என்பதற்கான விடை #Heismycandidate. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.