Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 14, 2016

வெடி விபத்தை சி.பி.ஐ., விசாரிக்குமா?: ஒப்படைக்க கேரளா சம்மதம்



கேரளாவில், புற்றிங்கல் தேவி கோவிலில், 113 பேரை பலி வாங்கிய, வெடி விபத்து வழக்கின் விசாரணையை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக, அம்மாநில அரசு, நேற்று அறிவித்தது.


கேரளாவின், கொல்லம் மாவட்டத்தில் உள்ள பரவூர் புற்றிங்கல் தேவி கோவிலில், வாணவேடிக்கையின் போது நடந்த வெடி விபத்தில் சிக்கி, 113 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பொதுநல வழக்கு:
இதைத்தொடர்ந்து, 'கோவில்களில் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்க வேண்டும்' என, மூத்த நீதிபதி அனுப்பிய கடிதத்தை பொதுநல வழக்காக கேரள ஐகோர்ட் விசாரித்தது. 'இந்த வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கலாமா' என்பது குறித்து கருத்து தெரிவிக்கும்படி, காங்.,கை சேர்ந்த முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.

இந்த பின்னணியில், மாநில அமைச்சரவைக் கூட்டம், நேற்று காலை நடந்தது. இந்த கூட்டத்துக்குப் பின், முதல்வர் உம்மன் சாண்டி, நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புற்றிங்கல் கோவில் வெடி விபத்து தொடர்பான வழக்கின் விசாரணையை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க தயாராக இருக்கிறோம். இத்தகவலை கேரள ஐகோர்ட்டில் தெரிவிப்போம்.

அமைச்சரவை துணை குழு :
இந்த விபத்து, கேரள மக்கள் ஒவ்வொருவரின் மனதிலும், ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தை, தேசிய பேரிடராக, மத்திய அரசு அறிவிக்க வேண்டும். வெடி விபத்து நடந்த கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக, மூன்று அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவை துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வெடி விபத்தால் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இக்குழு, அமைச்சரவைக்கு பரிந்துரைக்கும். இந்த விபத்து சம்பவத்துக்காக, உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா பதவி விலகவேண்டும் என்பதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

கான்கிரீட் சிதறல் :
விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 35 வயது நபரின் உடலில் இருந்து, அரை கிலோ, கான்கிரீட் சிதறல்கள், அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு உள்ளன.

அனாதையான குழந்தைகள்: நேசக்கரம் நீட்டுமா அரசு?
இந்த விபத்தில் பெற்றோரை இழந்து அனாதைகளான குழந்தைகளை, அரசு, தன் பராமரிப்பில் கவனிக்கும் எனத் தெரிகிறது. கோவிலில், வெடி விபத்து நிகழ்ந்த நேரத்தில் தேனீர் விற்றுக் கொண்டிருந்த, பெருவிளாவைச் சேர்ந்த பென்சி, 44, பாபி கிரிஜா, 41, தம்பதியரும் உயிரிழந்தனர். இவர்களுக்கு கிருஷ்ணா என்ற மகளும், கிஷோர் என்ற மகனும் உள்ளனர். 10ம் வகுப்பு படிக்கும் கிருஷ்ணாவையும், 7ம் வகுப்பு படிக்கும் கிஷோரையும் அரசு, தன் பராமரிப்பில் கவனிக்கும் என, தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.