Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 12, 2016

அன்புமணியுடன் ஒருநாள்... “சால்வை போட்டா பத்தாயிரம் ஃபைன்!”


ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்... அதிகாரத்தை அடையப்போவது யார்? அனல் பறக்கிறது களம். தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் மாநிலம் எங்கும் சுற்றிச் சுழல்கின்றனர்.

பா.ம.க-வின் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸின் பரபர பிரசாரத்தில் தொடங்குவோம்...     தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்ட மக்களை சந்திக்க காலையில் கும்பகோணத்திலும் மாலையில் அரியலூரிலும் `உங்கள் ஊர் உங்கள் அன்புமணி’ என்கிற கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  புதுக்கோட்டையில் கூட்டம் முடிந்து ஏப்ரல் 1-ம் தேதி இரவு 12 மணிக்குத்தான் கும்பகோணம் வந்தார் அன்புமணி. அந்த நேரத்திலும் ஹோட்டலில் உள்ளூர் ஆட்களைச் சந்தித்துப் பேசிவிட்டு 2 மணிக்குப் பிறகே உறங்கச் சென்றார்.

  ஏப்ரல் 2-ம் தேதி கும்பகோணத்தில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் காலை 6 மணிக்கே தயாராகி, அன்றைய செய்தித்தாள்களைப் புரட்ட ஆரம்பித்தார். தினகரனைப் புரட்டியதும் நாம் போட்டோ எடுக்க, ‘`அட... இருங்க தம்பி. வேற பேப்பர் எடுத்துக்கிறேன்’’ என்று உஷாராகிறார். ‘எனக்குத் துணை முதலமைச்சர் பதவி வேண்டாம்' என வைகோ பேசியது பற்றிய செய்தியைப் படித்தவர். ‘`இங்க பார்த்தீங்களா... இவங்க அலும்பு தாங்க முடியலை. பாவம் வைகோ, விஜயகாந்தோட சேர்ந்ததுல இருந்து அவருக்கு என்னமோ ஆகிடுச்சு. க்ளைமாக்ஸ்ல பாருங்க. `ஏன்டா சேர்ந்தோம்?’னு எல்லாரும் ஃபீல் பண்ணப்போறாங்க’’ என ஒரு ஜாலி ஸ்டேட்டஸைப் போட்டுவிட்டு, நம் லைக்ஸுக்குக் காத்திருக்காமல் குளிக்கக் கிளம்பினார்.

 காலை 9 மணி. ‘`கொஞ்சம் காய்ச்சல். பல ஊர் தண்ணி குடிக்கிறோமா, சேரலை. அதுக்காகக் கூட்டத்தைத் தள்ளிவைக்க முடியுமா?’’ என்றவர் கையுடன் எடுத்துவந்திருந்த இரண்டு மாத்திரைகளைப் போட்டுக்கொண்டார். அவருக்காக உள்ளூர் தொண்டர் ஒருவர் தன் வீட்டிலேயே கறந்த பசும்பாலில் ஹார்லிக்ஸ் ரெடி பண்ணிக்கொண்டுவர, முதலமைச்சர் வேட்பாளருக்கு அதுதான் பிரேக்ஃபாஸ்ட்!

  மணி 11, ஹோட்டல் ரிசப்ஷன் முழுக்க, வெள்ளைச் சட்டை பாக்கெட்டில் அன்புமணி படத்தை வைத்திருந்த தொண்டர்களும், மைக்குடன் நிருபர்களும் காத்திருக்க, ‘`ஏன் இங்கே நிக்கிறீங்க... உங்க எல்லாரையும் மண்டபத்துக்குத்தானே வரச் சொன்னேன்? கிளம்புங்க, அங்க பேசுவோம்’’ என்று காரில் ஏறினார்.

  கார் கிளம்ப, உதவியாளர் ஒரு ஃபைலைக் கொடுக்க, அதை சரசரவென புரட்டினார். முழுக்க தஞ்சாவூர் மாவட்டப் பிரச்னைகள் குறித்த தகவல்கள். இந்தக் கூட்டங்களுக்கு இதுபோன்ற தகவல்கள் திரட்டவே துறை வல்லுநர்கள் கொண்ட குழு ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறார். ‘`நான் நைட்டே முழுக்கப் படிச்சுட்டேன். இப்ப ஒரு தடவை பார்த்துக்கிட்டா மிஸ்டேக்ஸ் இருக்காதுல்ல?’’ என்றார். தேர்வுக்கு முன்னர் மாணவர்கள் பாடப் புத்தகத்தைப் புரட்டிப் பார்ப்பதுபோலவே இருந்தது.



  மண்டபத்துக்குச் செல்லும் வழியில், எங்கும் ஒரு பேனர்கூட இல்லை. ‘` `ஊருக்குள்ள எங்கேயும் பேனர்வெச்சு அலப்பறை பண்ணக் கூடாது’னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லியிருக்கோம். இளைஞர் அணியைச் சேர்ந்த ஒவ்வொருத்தரும் நேரடியா மக்களைச் சந்திச்சு, இது என்ன கூட்டம், என்ன பேசப்போறோம்னு விளக்கிச்சொல்லி அழைச்சிட்டு வரணும். மண்டபத்திலும் கட்சியினருக்கு உட்கார அனுமதி இல்லை. பொதுமக்களுக்கு மட்டும்தான் அனுமதி' என்றார்.

  கல்யாண மண்டப வாசலில் ஜி.கே.மணி தலைமையில் நிர்வாகிகள் காத்திருக்க, ‘சின்ன ஐயா வாழ்க... வாழ்க’ என கோஷங்கள் எழுப்புகிறார்கள். ‘`இப்படி கோஷம் போடக் கூடாதுனு எத்தனை முறைதான் சொல்றது?’’ என்று செல்லமாகக் கோபித்தபடி, மண்டபத்தின் உள்ளே, மைக் மாட்டுவதற்காக மணமகன் அறைக்குள் நுழைந்தார்.

 மேடை ஏறினார் அன்புமணி. பலரும் விசில் அடித்து வரவேற்றார்கள். 11:33 மணிக்குப் பேசத் தொடங்கினார். `மதுவையும் ஊழலையும் ஒழிப்பேன், நிர்வாகத்தை சீராக்குவேன், கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாகத் தருவேன்’ என்பதை உறுதியாகக் கூறினார். மீத்தேன் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்து தஞ்சை விவசாயிகளை காப்பேன் என ஏகப்பட்ட  `செய்வேன்’களை அள்ளி வீசினார். அதற்கான தகுதி தனக்கிருப்பதாக கூறியவர், தமிழ்நாட்டில் நான்கு முதலமைச்சர் வேட்பாளர்களில் தான் மட்டும்தான் ஃபிட்டாக இருப்பதாகக் கூறினார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது செய்த சாதனைகள் வரை கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் நின்றுகொண்டே பேசினார்.

  அடுத்து, கேள்வி, பதில் பகுதி. அதில் ஒருவர் எழுந்து, ‘`சில பா.ம.க-வினரும் மதுபான ஆலை நடத்துவதாக செய்தியில் படித்தேன். நீங்கள் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையே?’’ என்று கேட்டார். ‘`நீங்க எங்கே படிச்சீங்க?’’ என்று  திரும்பிக் கேட்டார். அவர் ஒரு டி.வி-யின் பெயரைச் சொல்ல, சிரித்துக்கொண்டே `‘அவங்க அப்படித்தான் நியூஸ் போடுவாங்க. விசாரிச்சுப் பாருங்க, நிச்சயம் முழுப் பொய்யாதான் இருக்கும்’’ என்று சமாளித்து உட்காரவைத்தார் அன்புமணி.

 பலரும் நிகழ்ச்சியின் முடிவில் ஓடிவந்து சால்வை போட, ‘`எங்க கட்சியில சால்வை போட்டால் பத்தாயிரம் ரூபாய் ஃபைன்’’ என மைக்கில் அறிவித்ததும், ஒரே கைத்தட்டல். சால்வை கொண்டுவந்தவர்கள் அப்படியே நின்றுவிட்டார்கள்.



  கூட்டத்தில் நடப்பதை எல்லாம் அப்போதைக்கு அப்போதே போட்டோ  எடுத்து பொருத்தமான கேப்ஷனோடு ஃபேஸ்புக்கில் அப்லோட் பண்ணிக்கொண்டிருந்தார் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆலயமணி.  `இந்த காலத்துல ஓட்டு மாதிரியே லைக்ஸும் வாங்க வேண்டியிருக்கப்பா' என்றார்.

  மணி 2:30. மூன்று மணி நேரம் நடந்த கூட்டத்தில் நடுவில் ஒரு விநாடிகூட அமரவில்லை; ஒரு சொட்டுத் தண்ணீர்கூட குடிக்கவில்லை. மண்டபம் முழுக்க இதைப் பற்றித்தான் பேச்சு. `எப்பிடிதான் அவ்ளோ நேரம் தாக்குப்பிடிச்சு நிக்கிறாரோ?' என்ற மக்களின் குரலை அவரிடம் கேட்டால், `‘மக்களைப் பார்த்துட்டா எல்லாத்தையும் மறந்துடுவேன்’’ என பன்ச்  அடித்தார். கூட்டம் முடிந்து காரில் ஏறியவரால் காலை மடக்கவே முடியவில்லை. சில நிமிடங்கள் காலை நீட்டியே வைத்துக் கொண்டிருந்தார். ஹோட்டலுக்குத் திரும்பிய பிறகும் கால் வலியோடுதான் இருந்தார்.
 3 மணிக்கு ‘புரொஃபஷனல்ஸ் ஃபார் அன்புமணி’ என இன்னொரு கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. அதில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கூடியிருக்க, அவர்களோடு அரை மணி நேரம் உரையாடினார். ``இங்கே நான் பேசறதை எல்லாம் கேட்டுட்டு அப்படியே போயிடக் கூடாது. எல்லாத்தையும் மக்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்கணும்'' என்று சொன்னார்.

 மணி 3:30. லஞ்ச் டைம். அன்புமணிக்கு மிகவும் பிடித்த உணவு, மீன். எந்த ஊருக்குச் சென்றாலும், மீன் உணவுகள் அவருக்காகவே பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்டு வந்துவிடு
கின்றன. கும்பகோணத்திலும் வீட்டிலேயே செய்த மீன் உணவுகள் வர, சாப்பாட்டில்கூட கைவைக்காமல் முதலில் வறுத்த மீன்களில் ஒன்றை எடுத்து சுவைத்துவிட்டுத்தான் சாப்பிட உட்காந்தார். ‘`உலகம் முழுக்கச் சுத்தியிருக்கேன். எங்கே போனாலும் எல்லா வகை மீன்களையும் சாப்பிட்டுப் பாத்துருவேன். போன ஜென்மத்துல மீனவனா இருந்திருப்பேன்போல... மீன்கள் மேல அவ்வளவு பாசம். டி.வி-லகூட மீன் பிடிக்கிறதைப் பத்தின நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பேன். நான்கூட ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அடிக்கடி கிளம்பிடுவேன்’’ என `மீனாயணம்’ பேசினார்.

 சென்ற இடம் எல்லாம் சளைக்காமல் செல்ஃபி எடுத்துக்கொண்டார். கும்பகோணம் ஹோட்டல் அறைக்குள் இளைஞர் அணியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் நுழைந்துவிட, ஒவ்வொருவருடனும் சளைக்காமல் சிரித்த முகத்தோடு செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார்.  கூடவே ஒவ்வொருவரையும் தனித்தனியாக பெயர் சொல்லி விசாரித்தார். மதியம் 3:30 மணியிலிருந்து 4 மணிவரை செல்ஃபி டைம்!



  மாலை 5 மணி. கும்பகோணம் கூட்டம் முடிந்து அரியலூருக்குக் கிளம்பினோம். காரில் அவருக்காகவே இளையராஜா பாடல்கள் தயாராக இருந்தன. ‘ராசாவே உன்னை, காணாத நெஞ்சு’ ஓடிக்கொண்டிருக்க, அப்படியே ஓய்வாக கண்களை மூடி, சாய்கிறார். ‘`ராஜா சார் பாட்டு இல்லாம என்னால ரெண்டு தெருகூடத் தாண்ட முடியாது’’ என்றார். ஆயிரக்கணக்கான பாடல்களைத் தொகுத்து வைத்திருக்கிறாராம். `‘ `ஜானி'யில் வரும் ‘காற்றில் எந்தன் கீதம்’ பாட்டு எனக்கு உயிர். எப்படிப்பட்ட மூடையும் மாத்தி அப்படியே மனசை அமைதியாக்கிடும்’’ என்றார்.

 அவருடைய காரைப் பார்த்து வழியெல்லாம் மக்கள் கைகாட்ட, அனைவருக்கும் டாட்டா காட்டிக்கொண்டே போனார். வழியில் ஓர் இடத்தில் தொண்டர்கள் வழிமறித்து நிறுத்தி, அவருக்கு அன்றைய தினத்தின் மாலைப் பத்திரிகைகளைக் கொடுக்க, வாங்கிக்கொண்டார். கூடவே பெரம்பலூர் மாவட்ட ஃபைலையும் புரட்ட ஆரம்பித்தார். நடுநடுவில் தன் குடும்பத்தினரோடு வாட்ஸ்அப்பில் சாட் செய்தார். ``ஃபேமிலிக்குனு குரூப் வச்சிருக்கோம். அதுலதான் பேசிக்குவோம்'' என்றார்.

  மாலை 6 மணி. கைகாட்டி என்ற இடத்தில் உள்ள பிர்லா ஓய்வுவிடுதியில் வண்டி நிற்க, அங்கே இறங்கி கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தார். அங்கே கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த
சில பையன்கள் இவரை அடையாளம் கண்டு அருகில் வர, அவர்களிடம் ஜாலியாக, ``தம்பி இன்னைக்கு மேட்ச்ல யார் ஜெயிப்பா... உனக்கு எந்த பிளேயர் ரொம்பப் பிடிக்கும்?’' என ஆர்வமாக விசாரித்தார். ``இருட்டிருச்சு... இல்லாட்டி உங்களோட ஒரு மேட்ச் ஆடியிருப்பேன்’' என்றார். ‘`ஸ்போர்ட்ஸ்னா எனக்கு அவ்ளோ பிடிக்கும். இப்பக்கூட துபாய், புனே, சென்னை... மூன்று இடங்கள்லேயும் மாரத்தான் ஓடியிருக்கேன். எப்போ கேப் கிடைச்சாலும் பாட்மின்டன் ஆடுவேன். என் கார்ல எப்பவும் ஒரு ஃபுல் பாட்மின்டன் கிட் ரெடியா இருக்கும்’’ என கிட்டைக் காட்டினார்.

  மணி மாலை 6:30. ``இன்னைக்கு இந்தியா வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்... ஏழு மணிக்கு மேட்ச்  ஆரம்பிக்கும்போதுதான் எனக்கு மீட்டிங்கும் ஸ்டார்ட் ஆகுது. இன்னைக்கு மேட்ச் பார்க்க முடியாது’’ என வருத்தப்பட்டார், கிடைத்த  இடைவெளியில் யார் டாஸ் ஜெயித்தது, டீமில் என்னவெல்லாம் மாற்றம் என  தெரிந்துகொண்டார்.



  மணி இரவு 7:00. கும்பகோணத்தைவிட அரியலூரில் கூட்டம் அதிகம். உள்ளே நுழைந்தவருக்கு விராட் கோஹ்லி போல உற்சாக வரவேற்பு. ஜன்னல் வழியாக எல்லாம் கூட்டம் வழிந்தது. கணிசமாக பெண்கள் கூட்டம். ‘சின்னய்யா எவ்ளோ செகப்பா இருக்கார்டி...’, ‘ `தனி ஒருவன்'ல வர்ற அரவிந்த் சாமியாட்டமே இருக்கார்ல?’, ‘சத்யராஜ் மாதிரி உயரம்டி’ என பெண்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் அன்புமணிக்கு. அவருடைய சுமாரான ஜோக்குகளுக்குக்கூட விழுந்து விழுந்து சிரித்தார்கள். மேடையிலேயே மொபைல் போன் வழியாக ஒட்டுமொத்தக் கூட்டத்தோடும் சேர்த்து செல்ஃபி எடுத்துக்கொள்ள, அரங்கம் அதிர்கிறது. கூட்டம் முடிந்து இறங்கியதும் முதல்வேளையாக, ``என்னாச்சு ஸ்கோர்?'’ என நம்மிடம் விசாரித்தார். இந்தியா  தோற்ற செய்தி தெரிந்ததும், ‘`நல்லவேளை மேட்ச் பார்க்கலை. இல்லைன்னா, நைட் எல்லாம் நிம்மதியாத் தூங்க முடியாமப் போயிருக்கும்’’ என சொல்லிவிட்டுக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

  கும்பகோணத்தில் பேசிய அதே ஸ்கிரிப்ட்தான் அரியலூரிலும். கூடுதலாக  உள்ளூர் பிரச்னைகளையும் சேர்த்துக்கொண்டார். எங்கு சென்றாலும் ``இன்னும் ரெண்டு மாசத்துல நம்ம ஆட்சி வந்துடும். அதுக்குப் பிறகு பாருங்க, எல்லாமே மாறிடும்'' என்ற பாசிட்டிவ் வார்த்தைகளைப் பேசினார்.

10 மணிக்குக் கூட்டம் முடிந்த பிறகு காரில் ஏறியவர், தைலாபுரம் வீட்டுக்குக் கிளம்பினார். ‘`நாளைக்கு கடலூர்ல ஒரு கூட்டம். இனிமே போய்தான் அதுக்கு பிரிப்பேர் பண்ணணும்’’ என ஓய்வாகச் சாய்ந்தார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.