Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 20, 2016

டப்பாவாலாஸ்!


உங்கள் வீட்டிலிருந்து ட்பாபவைப் (டிஃபன் கேரியரைத்தான் அப்படிச் சொல்கிறார்கள்) பெற்றுக் கொண்டு நீங்கள் பணியாற்றும் இடத்திற்கு அதைக் கொண்டு தரவேண்டும். சாப்பிட்ட பிறகு அதை உங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும். இதை தான் டப்பாவாலா செய்கிறார்.
விடியற்காலையிலேயே டப்பாவாலா தன் சைக்கிளில் மும்பையின் பல பகுதிகளுக்குச் செல்வார். இந்த சைக்கிள் கனமானதாக இருக்கும். அதிக எடையை தாங்கும் வகையில் இதன் பின்புற இருக்கைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
மும்பையில் உள்ள பல வீடுகளிலிருந்து டப்பாக்களை அவர் பெற்றுக் கொள்வார். இதில் பல நடைமுறைக் கஷ்டங்கள் உண்டு. மும்பையில் பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள். இவற்றில் பழங்காலத்தில் கட்டி முடிக்கப்பட்டவற்றில் லிஃப்ட் கிடையாது. மேலே கீழே என்று ஏறி, இறங்கி இப்படிப் பல கட்டடங்களிலிருந்து ஒரு டப்பாவாலா டப்பாக்களைப் பெற வேண்டும். அதாவது தனது சைக்கிளில் சுமார் 40 டப்பாக்களை வைத்து கொண்டு அருகிலுள்ள ரயில் நிலையத்துக்குச் செல்வார். (மட்டமான சாலைகள், போக்குவரத்து நெரிசல், மழைக்காலம் என்று எப்படி இருந்தாலும் செல்ல வேண்டும் என்பதுதான் சவால்).
ரயில் நிலையத்தில் பல்வேறு திசைகளிலிருந்தும் பல டப்பாவாலாக்கள் காத்திருப்பார்கள். ஒவ்வொரு டப்பாவாலாவும் மும்பையின் ஒவ்வொரு பகுதிக்கு டப்பாக்களை எடுத்து செல்ல வேண்டும். ரயில் நடைமேடைகளிலேயே டப்பாக்களை செல்ல வேண்டிய பகுதிக்கேற்ப பிரித்து அடுக்கிக் கொள்வார்கள். ஆக போக வேண்டிய இடத்திற்கேற்றபடி டப்பாக்கள் கைமாறும். இதற்காக சங்கேத எண்கள் எல்லாம் உண்டு. ஏனென்றால் மின்னல் வேகத்தில் இதெல்லாம் நடைபெற வேண்டும். அதாவது உங்கள் டப்பாவை வீட்டிலிருந்து பெறுபவர் ஒருவர். அதை உங்கள் அலுவலகத்தில் கொடுப்பவர் மற்றொருவர் (கிட்டத்தட்ட அஞ்சல்துறை மாதிரி.
ரயில் நிலையத்தில் காத்திருக்கும் ஒவ்வொரு டப்பாவாலாவின் தலையிலும் பிரம்மாண்ட மரத்தினாலான கூடை இருக்கும். அதில் 50-60 டப்பாக்களை வைக்க முடியும். சுலபத்தில் சுமக்க முடியாத எடை. இதோடு வர்கள் ரயிலில் ஏறுவார்கள் (அதுவே ஒரு சர்க்கஸ் சாதனை அல்லது வேதனை). அடுத்த ரயிலுக்காக தாமதிக்க முடியாது. உணவைக் கொண்டு சேர்ப்பது தாமதமாகிவிடும்.
அந்தந்த பகுதிகளில் காத்திருக்கும் டப்பாவாலாக்கள் தங்கள் ஏரியாவில் உள்ள அலுவலகங்களுக்கு வந்து சேரும் டப்பாக்களை ட்ராலியில் ஏற்றிக் கொண்டு சேர வேண்டிய இடத்தை நோக்கி விரைவார்கள். வழி முழுவதும் தள்ளிப் போங்கள் என்று கூக்குரல் எழுப்புவார்கள். இங்கும் ஒவ்வொரு வணிகக் கட்டடத்திலும் பல மாடிகள் ஏறி, இறங்க வேண்டும். மதியம் 1.00 மணிக்குள் டப்பாகள் உரியவர்களுக்கு வழங்கப்படும். 2.00 மணிக்கு எல்லா டப்பாக்களையும் சேகரித்து மீண்டும் அவரவர் வீட்டுக்கு மாலை 6.00 மணிக்குள் கொடுத்துவிட வேண்டும்.
நூறு வருடங்களுக்கு மேலாக டப்பாவாலாக்கள் சாம்ராஜ்யம் நடைபெறுகிறது. மிகச் சிறப்பாக சீராக இயங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிக் சிக்மா என்ற தர அந்தஸ்தை அளிப்பார்கள். மும்பையின் டப்பாவாலாக்களுக்கும் அந்த அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை ஒருநாள் கூட இவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதில்லை. (ஒரே ஒரு விதிவிலக்கு. 2011ல் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய ஊர்வலத்தில் இவர்கள் கலந்து கொண்ட நாள்)
1890ல் மகாதேவ ஹவாஜா பச்சே என்பவர் 100 ஆட்களைக் கொண்டு இப்படி ஒரு காரியத்தில் ஈடுபட்டார். அதுதான் இன்று ஆலமர விழுதுகள் போல பரவியிருக்கிறது.
பெரும்பாலான டப்பாவாலாக்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள். எனவே டப்பாக்கள் கிளம்புமிடம், போகுமிடம் தொடர்பாக சின்ன சின்ன வண்ணக் குறியீடுகள் டப்பாவின் மீது பெயின்ட் அடிக்கப் பட்டிருக்கும். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் உள்ளூர் டப்பாவாலாக்களிடம் அந்தந்தப் பகுதியில் சேர வேண்டிய டப்பாக்கள் அளிக்கப்படும். மொத்தத்தில் பெறப்படும் தொகையை டப்பாவாலாக்கள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வார்கள். ஆண்டுக்கு சுமார் 8 சதவிகிதம் என்று இந்தத் தொழில் அதிகரித்து வருகிறது.
டப்பாவாலாக்களின் கூட்டு செயல் திறமை கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் வேறொரு மனிதாபிமானமிக்க செயலையும் டப்பாவாலாக்கள் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். மும்பையில் பல குடும்பங்கள் பசியில் வாடுகிறார்கள். சில லட்சம் குழந்தைகள் உட்பட, இதைத் தவிர்க்கும்விதமாக டப்பாவாலாக்கள் ஒன்றைச் செய்கிறார்கள். தினமும் அவர்கள் மூலமாக அளிக்கப்படும் 120 டன் உணவில், சுமார் 16 டன் உணவு சாப்பிடப்பாமல் மிச்சமாகிறது. இதை அந்த ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்தால்? இதற்கு ஒத்துக் கொள்ளும் வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். ஷேர் மை டப்பா என்ற வார்த்தை கொண்ட ஸ்டிக்கர் ஒன்றைத் தங்கள் டப்பாவின்மீது ஒட்டிவிட வேண்டும். அப்படிக் காணப்படும் டப்பாக்களில் மீதமாகும் உண்வை பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஏழைக் குழந்தைகளுக்குத் தன்னார்வத் தொண்டர்களின் மூலம் கொடுக்கிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.