ரேஷன் கார்டு முதல் மின் இணைப்பு வழங்குவது வரை தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் ஊழல் வெளிப்படையாக நடக்கிறது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடுமையாக குற்றம்சாட்டினார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது முதல்வர் ஜெயலலிதா பிரதமராக போகிறார் என்று மக்களிடம் பிரசாரம் செய்தனர். இதனால் தான் தமிழகத்தில் 37 இடங்களில் அதிமுகவால் வெற்றிப்பெற முடிந்தது. எனினும், 282 இடங்களில் தனி மெஜாரிட்டியுடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது. மத்திய அரசின் அரிசி: கடந்த 2 ஆண்டுகளாக ஊழல் இல்லாத நல்ல ஆட்சியை மோடி நடத்தி வருகிறார். தமிழகத்தில் ஏழை மக்களுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அது அம்மா அரிசி என்ற பெயரில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உண்மையில் அது அம்மா அரிசி இல்லை. சொல்ல வேண்டுமானால் அது மோடியின் அரிசி, பிரதம மந்திரியின் அரிசி.
1 கிலோ அரிசிக்கு மத்திய அரசு மானியமாக ரூ.32.66 வழங்குகிறது. ஆனால் வெறும் ரூ.3 மட்டுமே மாநில அரசு வழங்குகிறது. ஆனால், புத்திசாலித்தனமாக தாங்கள் வழங்குவது போல மக்களை அதிமுக அரசு ஏமாற்றி வருகிறது. ஜெயலலிதாவுக்கு புரியவில்லை: ஜல்லிக்கட்டு போட்டியை அடுத்த ஆண்டில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. உதய் மின் திட்டத்தை ஜெயலலிதா அரசு புரிந்து கொள்ளவில்லை. இதனால், தமிழக மக்களுக்கு அந்த திட்டத்தின் மூலம் பயன் கிடைக்கவில்லை. உதய் திட்டத்தை செயல்படுத்திய 20 மாநிலங்களில் உள்ள மக்கள் நல்ல பயனடைந்துள்ளனர்.
உதய் திட்டத்தில் உள்ள நன்மைகளை விளக்கி கூறுவதற்காக அடுத்த வாரம் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தமிழகம் வரவுள்ளார். ஏ டூ இசட் லஞ்சம்: தமிழகத்தில் ரேஷன் கார்டு பெறுதல் முதல் மின் இணைப்பு பெறுதல் வரை அனைத்திற்கும் லஞ்சம் கொடுக்கும் நிலை உள்ளது. ஒவ்வொன்றிற்கும் தனித்தனி விலை நிர்ணயித்துள்ளனர். தமிழகத்தில் எல்லா இடங்களிலும் ஊழல் வெளிப்படையாக நடந்து கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் சீரழிந்து வருகின்றனர். பெண் குழந்தைகளை குடிக்க வைத்த பெண் முதல்வர்: தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கிறதோ இல்லையோ எந்த நேரத்திலும் டாஸ்மாக் கிடைக்கிறது.
அமோகமாக டாஸ்மாக் விற்பனையாகி கொண்டிருக்கிறது. தற்போதைய ஆட்சியின் ஒரு சாதனை பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளை குடிப்பழக்கத்துக்கு ஆளாக்கும் மோசமான கலாசாரத்தை ஏற்படுத்தியது தான். பாஜ தேர்தல் அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும். மீதமுள்ள பாஜ வேட்பாளர்களின் பட்டியலில் இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் ேபாது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இளைஞர் அணி தேசிய துணை தலைவர் முருகானந்தம், பொது செயலாளர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.