Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 5, 2016

தனியாக வாங்க!-சிறுகதை


ஒரு சமயம் விஜயநகரப் பேரரசு கிருஷ்ணதேவராயருடைய அரசவைக்கு வண்ண வண்ணத் தலைப்பாகை அணிந்த உயரமான இருவர் வந்தனர்.
அவர்கள், "அரசே! நாங்கள் அஜ்மீரிலிருந்து வருகிறோம். அந்த ஊர் வாசனைத் தைலத்துக்குப் பெயர் போனது. நீங்களும் போட்டுப் பாருங்கள்... மகிழ்வீர்கள்...'' என்றனர்.
"எடுங்கள்... பார்க்கலாம்...'' என்றார் அரசர்.
கொஞ்சம் முகர்ந்து பார்த்தார். மகிழ்ச்சி அடைந்தார். சபையினரும் புகழ்ந்தனர். அனைவரும் பல பாட்டில்களை வாங்கிக் கொண்டனர். வியாபாரிக்கு மகிழ்ச்சி.
அவர்களில் ஒருவன், "இதுபோன்ற வாசனைத் தைலம் உலகில் வேறு எங்கும் கிடைக்காது. விரும்பினால் நீங்கள் இந்த விஜய நகரிலேயே கூடத் தைலத்தைத் தயாரித்துக் கொள்ளலாம்,'' என்றான்.
அரசர் அவர்களை விருந்தினர் மாளிகையில் தங்கவைத்தார். பத்து நாட்கள் கடந்தன.
பிறகு இருவரும், ""அரசே! அந்த அற்புதமான வாசனைத் தைலம் தயாராகி விட்டது. நீங்களே வந்து பார்த்து மகிழலாம். முதலில் நீங்கள் மட்டும் வாருங்கள். பிறகு அவையினர் வரலாம்,'' என்றனர்.
"சரி...!'' என்ற அரசர் அவர்களுடன் சென்றார்.
விருந்தினர் மாளிகையில் வியாபாரிகள் ஒரு பெரிய சிவப்பு நிறப் பெட்டியைத் திறந்தனர். அதனுள் இன்னொரு அழகிய பெட்டி இருந்தது. அதைத் திறந்ததும் அதனுள் இன்னொரு வெள்ளைப் பெட்டி. அதை எடுத்துத் திறந்த போது உள்ளே ஒரு சிறு கண்ணாடி சீசா...!
அதை எடுத்து அரசரிடம் கொடுத்து, ""அரசே! இதனுள்தான் அந்த விலை உயர்ந்த வாசனைத் தைலம் உள்ளது. கொஞ்சம் முகர்ந்து பாருங்கள்...'' என்றனர்.
அரசர் அதனருகில் நெருங்கினார்.
அப்போது ஒரு உரத்த குரல்.
"நில்லுங்கள்... என்னிடம் அதை விட உயர்வான தைலம் உள்ளது. முதலில் அதை முகர்ந்து பாருங்கள்...'' என்றது.
அக்குரலோடு கூடவே விஜய நகர வீரர்கள் "திமு... திமு...' என்று உள்ளே நுழைந்து, வியாபாரிகள் இருவரையும் ஓடிவிடாமல் பிடித்துக் கொண்டனர்.
அப்போது தெனாலிராமன் முன்னால் வந்து சொன்னார், ""அரசே! இந்த அதிசய வாசனைத் திரவத்தை முதலில் அதைத் தயாரித்த இரு வியாபாரிகளும் முகர்ந்து பார்க்கட்டும்,'' என்று அவ்விருவரின் மூக்கின் அருகில் வைத்தார்.
அதை முகர்ந்ததும் இருவரும் மயங்கிக் கீழே சாய்ந்தனர். அதைக் கண்டதும் அரசர் திடுக்கிட்டார்.
தெனாலி தொடர்ந்தார், ""அரசே! உங்களை இவ்விருவரும் தனியாக வரச் சொன்னதுமே எனக்கு இவர்கள் மீது சந்தேகம் வந்துவிட்டது. அப்போது இருவரும் தமக்குள் ஏதோ கண் ஜாடை காட்டிக் கொண்டனர். அதை நான் கவனித்துவிட்டேன். உங்களுக்கு இவர்கள் ஏதோ தீங்கு செய்யப் போகிறார்கள் என்று உணர்ந்து , நானும் பின்னாலேயே வந்தேன். வந்து பார்த்தால் நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள்...'' என்றார்.
அதைக் கேட்டு அரசர் தெனாலிராமனை அன்புடன் வாரி அணைத்துக் கொண்டார். பிறகு அவருக்குப் பரிசும் கொடுத்தார் கிருஷ்ணதேவராயர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.