ஆயுதக் கடத்தல், போதைமருந்துக் கடத்தலைவிட இன்று உலகில் அதிகமாகிவிட்டது குழந்தைகள் கடத்தல். மருத்துவமனைகள்,பள்ளிக்கூடம் வாசல்கள், பஸ் தரிப்பு நிலையங்கள் என்று மக்களின் நடமாட்டம் அதிகமுள்ள எல்லா இடங்களிலும் பிள்ளைகளைக் கடத்தும் வலைத்தளம் (NETWORK) பரந்து விரிந்து செயற்படுகிறது. உலகில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 35 இலட்சம் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். இதில், இந்தியாவே முதலிடம் வகிக்கிறது. அதிலும் பெண் குழந்தைகள் கடத்தலில் தமிழ் நாட்டுக்கே முதலிடமாம். சூடான், எதியோப்பியா, சோமாலியா, கொங்கோ குடியரசு என்று அதன் பட்டியல் அடுத்தடுத்து நீண்டு கொண்டே போகிறது.
சீனி மிட்டாயில் மயக்க மருந்தைக் குழந்தைகளுக்குக் கலந்து கொடுத்து கோணிப் பையில் பிள்ளைகளைப் பிடித்துப் போட்டுக் கொண்டு போனதெல்லாம் அந்தக் காலம். இப்பொழுது குழந்தைக் கடத்தலின் வடிவம் மாறி விட்டது. இந்தக் கடத்தலின் வலைத்தளம் எப்படி இயங்குகிறது, என்ன நோக்கத்தற்காக குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள், கடத்தப்படும் குழந்தைகளின் கதி என்னவாகிறது என்பன பற்றியெல்லாம் அண்மையில் ஹிந்து பத்திரிகையில் வெளியான கட்டுரையொன்று அந்தக் கொடூர நிழல் உலகத்தை நம் கண்முன்னே படம் விரித்துக் காட்டுகிறது.
உலகில் அதிக ஆதாயம் தரக்கூடிய தொழில் மூன்று. ஆயுத விற்பனை, போதைப் பொருள் கடத்தல், மனிதக் கடத்தல். இந்த மனிதக் கடத்தலில் பிரதானமானது குழந்தைகள் கடத்தல்தான். கண்டம் விட்டுக் கண்டம் கூட குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள்.
குழந்தைகள் கடத்துவதில் மூன்று வகையுண்டு. மிரட்டிப் பணம் பறிக்க, பணயமாகக் குழந்தைகளைக் கடத்துவது, வறுமையைப் பயன்படுத்தி, படிப்பு, மற்றும் வேலை வாங்கித் தருவதாக கூறிக் கடத்துவது, யாருமறியாத விதத்தில் தூக்கிச் செல்வது! பணம் பறிக்கக் கடத்தும் சம்பவத்தில் பெரும்பாலும் தெரிந்தவர்களே ஈடுபடுகிறார்கள். இதற்கும் பிற கடத்தல் வகைகளுக்கும் வித்தியாசமுண்டு. மருத்துவமனைகள், பாடசாலைகள், பொது இடங்களில் வைத்துக் கடத்திச் செல்வதும், வாக்குறுதிகள் கொடுத்து அழைத்துச் சென்று குழந்தைகளை விற்பனை செய்வதும்தான் அபாயகரமானவை.
பிறகு ஒரு கட்டத்தில், “ஏன் இப்படிச் சிரமப்படுகிaர்கள்? எனக்குத் தெரிந்த ஒரு பெரிய பணக்காரர் வீட்டில் மூன்று மாதக் குழந்தையொன்று இருக்கிறது. அதனோடு விளையாடிக் கொண்டிருக்க ஒரு பிள்ளை வேண் டும். உங்கள் பிள்ளையை அங்கே சேர்த்து விட் டால், அவர்களே பிள்ளையைப் படிக்க வைப்பார்கள். நல்ல சாப்பாடு, துணிமணி எல்லாமே கிடைக்கும் என்கிற மாதிரியெல்லாம் ஆசை வார்த்தை சொல்லி மூளைச் சலவை செய்வார். பெற்றோரின் கையில் கொஞ்சம் பணத்தையும் கொடுத்து, பிள்ளையை அழைத்துச் சென்று நகரத்திலுள்ள வேறொருவரின் கையில் ஒப்படைத்து அதற்கான சன்மானத் தொகையையும் வாங்கிக் கொள்வதோடு அவரது வேலை முடிந்து ஒதுங்கி விடுவார். அதன்பிறகு அப்பிள்ளை எங்கே யாரிடம் செல்கிறது என்பதெல்லாம் அவருக்குத் தெரியாது.
பிள்ளையைப் பெற்றுக் கொள்ளும் தரகரும் (PROCURER) அதனை அழைத்துச் சென்று இன்றொரு முகவரிடம் ஒப்படைத்து பணம் பெற்றுக் கொள்வதோடு அவரது வேலையும் முடிவடைகிறது. இனிப் பொறுப்பேற்கும் முகவரும் (TRANSPORTER) அப்பிள்ளையை வசதியான ஓரிடத்தில் தங்க வைத்து அன்பாக நடத்துவது போல காட்டிக் கொள்வார். தின்பண்டங்கள், விளையாட்டுச் சாமான்கள், ஆடையணிகள் வாங்கித் தந்து குஷிப்படுத்துவார்.
பிள்ளையுடன் ரயிலிலோ விமானத்திலோ போகும் போது பொலிஸாரிடம் மாட்டிக் கொண்டால் பிள்ளை தன்னைக் காட்டிக் கொடுத்து விடாதிருக்கவே இந்தக் கவனிப்பு. பிள்ளைகளுக்கு எங்கு தேவையிருக்கிறதோ, அங்கெல்லாம் அவர் பேரம் பேசுவார். எதிர்பார்த்த தொகை கையில் கிடைத்தவுடன் ஏலம் எடுத்த முதலாளியிடம் பிள்ளையை ஒப்படைத்துவிட்டு அவரும் விலகி விடுவார். இனி இந்த முதலாளிதான் அந்தச் சிறுமி அல்லது சிறுவனுக்கு எளிதில் ஒட்டுமொத்த எஜமானன். ஓர் அஞ்சலோட்டம் போன்றதுதான் இப்பிள்ளைகளின் கைமாற்றல்கள். பொலிஸாரிடம் அகப்பட்டுக் கொள்ளாதிருக்கவே இந்த சதுரங்கக் காய்நகர்த்தல்கள்.
நான்கைந்து மாதக் குழந்தையாயிருந்தால் குழந்தையில்லாத தம்பதிகளுக்கு இலட்சக்கணக்கில் விலைபேசி விற்றுவிடுவார்கள். முன்பு உடல் உறுப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு விற்பது நடந்தது. ஆனால் இப்போது விமான நிலையங்களிலும் துறைமுகங்களிலும், நாட்டின் எல்லையோரங்களிலும் கட்டுக்காவல்கள் அதிகரிக்கப்பட்ட பின் அதுவெகுவாய்க் குறைந்து விட்டது.
3 முதல் 10 வயது வரையிலான ஆண் குழந்தைகளே கொத்தடிமைகளாக அனுப்பப்படுகிறார்கள். ஆந்திராவின் முறுக்குத் தொழிற்சாலைகள், வடமாநிலத்திலுள்ள இறால் பண்ணைகள், ஹோட்டல்கள், கிரனைட், மொசைக் கற்கள், ஓடுகள் தயாரிக்கும் கம்பனிகள், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு விவசாய வேலைகளுக்கும் அனுப்பப்படுகிறார்கள். விடிய 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஓய்வில்லாத வேலை. போதிய சாப்பாடு தரமாட்டார்கள். வேலையில் கவனம் செலுத்தாவிட்டால் அடியுதை ஆக்கினை. கொதிக்கும் எண்ணெயை ஊற்றுவது, உடம்பில் சூடுவைப்பது, இப்படி எல்லாச் சித்திரவதைகளும் நடக்கும். அதிகம் முரண்டு பிடித்தாலோ, தப்பியோட முயன்றாலோ மரணம்தான் தண்டனை.
பிச்சையெடுக்கும் தொழில் மாபியா என்ற போதைப்பொருள் வர்த்தகம் போல் அசுரவேகத்தில் வளர்ந்துவிட்ட காலமிது. கடத்தப்படும் குழந்தைகளில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் பிச்சையெடுக்கவே அனுப்பப்படுகிறார்கள். பிக்பக்கெட் அடிக்கவும் கூடப் பயிற்றப்படுகிறார்கள். இவர்களில் பலர். இவர்கள் மீது சனங்களுக்கு பரிதாபம் வரவேண்டுமென்பதற்காக உடலில் காயங்களை ஏற்படுத்துதல், கைகால்களை சிதைத்து முடமாக்குதல் போன்ற கொடூரங்களும் நடத்துகின்றனவாம். அதேவேளை குழந்தைகள் மீது சந்தேகம் வராது என்பதற்காக போதைப்பொருள் கடத்துவதற்கும் இவர்களைப் பயன்படுத்துவதும் நடக்கிறது. அதற்கு முன்பாக குழந்தைகளையும் போதைக்கு அடிமையாக்கி விடுவார்களாம். இதற்காக வெளிநாடுகளுக்கும் குழந்தைகளைக் கடத்துகிறார்கள்.
கடத்தப்படும் பெண் குழந்தைகள் வீட்டு வேலைக்காக விற்கப்படுவது முண்டு. இவ்வாறு விற்கப்படும் குழந்தைகள் அவ்வீடுகளில் நரகத்தை அனுபவிப்பார்கள். செய்யும் சிறுசிறு தவறுகளுக்கும் அடி, உதை, சூடு, அத்துடன் வீட்டு உரிமையாளர்கள், பணியாளர்களினால் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
இத்தொடரிலுள்ள இன்னொரு மிகப் பலமான வலைத்தளம் பாலியல் வியாபாரம், இதில் பல ரகங்களுண்டு. குழந்தைகள் ஒன்றாகவே எப்போதும் நம் அன்புக்கும் பரிவுக்கும் உரியவர்கள். ஒவ்வொரு வீட்டிலும் அவர்களோ எஜமானர்கள். வீட்டில் குதூகலமும் நிறைவும் தாண்டவமாட அவர்களே காரணம். அவர்கள் மீது நாம் பாசம் தான் காட்டுவோம். இதற்கும் விதிவிலக்காக இப்படிப்பட்ட பாசத்தையும் ஒருவித காமரசனையாக்கி, விரசமாக குழந்தைகளைப் பார்க்கிற வக்கிரபுத்திக்காரர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். மூன்று வயது வரையுள்ள குழந்தைகள்தான் இவர்களது இலக்கு.
அந்த நூதனமான விரச வேதனையை பூர்த்தி செய்ய எவ்ளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்ய அவர்கள் தயங்க மாட்டார்கள். இப்படியானவர்களுக்கு ஏற்ற தீனி போடுமிடம் இந்தியாவில் கோவா சுற்றுலாப் பிரதேசம் தானென்றும் கூறப்படுகிறது. இவர்கள் தவிர பெண்களிடம் தங்கள் ஆண்மையை நிரூபிக்க முடியாதவர்களும் குழந்தைகளையே நாடுகிறார்களாம். இவர்களின் தேர்வு ஆண் குழந்தைகளே. இதற்கெனவே இந்தியா உட்பட தெற்காசியா நாடுகளுக்கு சுற்றுலாப் பயணத்தின் சாட்டில் வருவதாகவும் தகவலுண்டு.
அடுத்தது விபசாரம். 8 முதல 12 வயது வரையிலான சிறுமிகளுக்கு இந்திய கரையோர சுற்றுலா நகரங்களில் கடும் கிராக்கியுண்டாம். கன்னிமை கெடாமல் வரும் புத்தம் புது மலர்களுக்கே அதிக வாடகை தரப்படுகிறது. மும்பை, டெல்லி, கொல்கொத்தா மாநிலங்களில் இந்த வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறதாம். முதலில் மது, போதை மற்றும் ஆபாசப் படங்களுக்கு சிறுமியரை அடிமையாக்கி களத்தில் இறக்குவார்களாம். அவர்களை வைத்து எடுக்கப்படும் ஆபாசப் படங்களுக்கு உலகம் முழுவதும் பெரும் சந்தை வாய்ப்புண்டு. அத்துடன் சிறுவர், சிறுமியரை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று ஆபாசப்படங்கள் தயாரிப்பதும் நடக்கிறதாம்.
இது தொடர்பில் தமிழகத்திலுள்ள பிள்ளைகளைத் தத்தெடுக்கும் நிலையங்களும் முறைகேடாகச் செயற்படுவதாக புகார்கள் வருகின்றன. குழந்தைகள் கடத்தும் விவகாரங்களிலும் இது போன்ற நிலையங்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் முறைப்பாடுகளுண்டு.
இந்தியாவில் சாராயக் கடத்தலுக்கு எதிராகக் கூட காவல் துறையில் தனிப்பிரிவு இயங்குகிறது. ஆனால், குழந்தைகள் கடத்தலுக்கு எதிரான எந்தப் பிரிவும் இல்லை. சாதாரண ரோந்துப் பொலிஸார்தான் குழந்தைக் கடத்தல் முறைப்பாடுகளையும் விசாரிக்கிறார்கள். எனவே, இதற்கெனவும் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, இதற்கென்று தேர்ச்சிபெற்ற அதிகாரிகளையும் நியமித்து, கடத்தல்காரர்களைத் தண்டிக்க தனியான கடுமையான சட்டங்களையும் உருவாக்க வேண்டும். இக்கடத்தலின் பல்வேறு வடிவங்கள், வழிகள் குறித்து பொலிஸாருக்கு விழிப்புணர்வூட்ட வேண்டுமென கல்விமான்களும், ஆன்மீகத் தலைவர்களும் வழக்கறிஞர்களும் ஆலோசனை கூறுகின்றனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.