தமிழகத்தின் 9வது சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற திமுக ஆட்சியின் பதவி காலம் அற்ப ஆயுசில் பறிக்கப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும். 1989 ஜனவரியில் பொறுப்பேற்ற திமுக அரசு, சரியாக 24 மாதம் கழித்து 1991 ஜனவரி 31ல் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. 356வது சட்டப்பிரிவை பயன்படுத்தி திமுக ஆட்சியை கலைக்கவேண்டும் என்ற ஜெயலலிதாவின் நெருக்கடிக்கு பணிந்தார் அப்போது பிரதமராக இருந்த சந்திரசேகர். தமிழகத்தில் விடுதலைப்புலிகள் நடமாட்டம் இருப்பதாக ஆட்சி கலைப்புக்கு மத்திய அரசு விளக்கமளித்தது.இச்சூழலில், காங்கிரஸ் தலைவர் ராஜிவ்காந்தி இல்லத்தை மத்திய அரசின் போலீசார் உளவு பார்த்ததாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து சந்திரசேகர் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் பதவியை ராஜினாமா செய்த சந்திரசேகர், நாடாளுமன்ற தேர்தலுக்கு பரிந்துரைத்தார். தமிழக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் 1991 மே 26ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.
திமுக தலைமையிலான கூட்டணியில் இடதுசாரிகள், ஜனதாதளம், திருநாவுக்கரசு தலைமையில் இயங்கிய அண்ணா புரட்சி தலைவர் திமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றன. திமுக 171 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் மீதமிருந்த தொகுதிகளிலும் போட்டியிட்டது. அதிமுக - காங்கிரஸ், இந்திய ஐக்கிய பொதுவுடைமை கட்சி, செல்லமுத்து தலைமையிலான உழவர் உழைப்பாளர் கட்சி ஆகியன இணைந்து போட்டியிட்டன. 199 தொகுதிகளில் பாமக தனித்து போட்டியிட்டது. துறைமுகம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டார். பர்கூர், காங்கேயம் என இரு தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட்டார்.
இத்தேர்தலில் முதல் முறையாக 90 சதவீத தொகுதிகளுக்கு புதுமுகங்களை ஜெயலலிதா வேட்பாளராக அறிவித்திருந்தார். 24 மாத ஆட்சியில் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை விளக்கி அக்கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். மத்தியில் நிலையான அரசு மற்றும் விடுதலை புலிகள் நடமாட்டம் குறித்து அதிமுக தரப்பில் பிரசாரமாக முன் வைக்கப்பட்டது. இந்நிலையில் மே 21ம் தேதி தமிழகத்தில் பிரசாரத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராஜிவ் காந்தி பெரும்புதூரில் போட்டியிட்ட மரகதம் சந்திரசேகரை ஆதரித்து பிரசாரம் செய்ய சென்றார். அப்போது அங்கு நடந்த குண்டுவெடிப்பில் ராஜிவ் காந்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பொய்யான பிரசாரத்தால் பல இடங்களில் திமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. திமுக தேர்தல் அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மே 26ல் அறிவிக்கப்பட்ட தேர்தல் அசாதாரண சூழ்நிலையை கருதி ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ராஜிவ் கொலையை தொடர்ந்து 25 நாட்களில் நடத்தப்பட்ட தேர்தல் அதிமுக கூட்டணிக்கு அனுதாப அலையாக மாறியது. 168 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 164 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. 66 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் 63 இடங்களில் வென்றது. திமுக கூட்டணியில் துறைமுகத்தில் கருணாநிதி மட்டும் வெற்றி பெற்றார். கூட்டணியில் இடம் பெற்ற திருநாவுக்கரசர், சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஜனதாதளம் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றனர். பாமக சார்பில் போட்டியிட்டவர்களில் பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் வெற்றி பெற்றார். சுயேட்சை வேட்பாளர் மரணத்தால் எழும்பூர் தொகுதியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
தோல்விக்கு பொறுப்பேற்று துறைமுகம் தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை கருணாநிதி ராஜினாமா செய்தார். பர்கூர், காங்கேயம் இரண்டில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, காங்கேயம் தொகுதியில் ராஜினாமா செய்தார். இதையடுத்து எழும்பூர், காங்கேயம், துறைமுகம் தொகுதிக்கு தேர்தல் நடந்தது. இதில் திமுகவின் பரிதி இளம்வழுதி (எழும்பூர்), செல்வராஜ் (துறைமுகம்) வெற்றி பெற்றனர். காங்கேயத்தில் ஆர்.எம்.வீரப்பன் (அதிமுக) வெற்றி பெற்றார். அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன் உள்பட 32 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். சபாநாயகராக சேடப்பட்டி முத்தையாவும், எதிர்க்கட்சி தலைவராக காங்கிரசின் எஸ்ஆர் பாலசுப்ரமணியமும் செயல்பட்டனர்.
ராஜிவ் கொலையை தொடர்ந்து 25 நாட்களில் நடத்தப்பட்ட தேர்தல் அதிமுக கூட்டணிக்கு அனுதாப அலையாக மாறியது. 168 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 164 இடங்களில் வெற்றி பெற்றது.
Thanks To: dinakaran.com




No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.