Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 19, 2016

அந்த காலத்திலேயே காதல் கடிதம் எழுதிறது என்றால் பெரிய கஷ்டம் இல்லை.





 நாலைஞ்சு சினிமா பாடல்களை உல்டா பண்ணி, ஆட்டோகிராபிலே எழுதி இருக்கும் வசனங்களை சேர்த்து, எழுதினால் போச்சு.

நானும் எழுதினேன்.

ஆருயிர் காதலி திவ்யா,

ஆழ்கடல் வற்றினாலும் என் அன்புக்கடல் வற்றாது.
வானத்திலே இருக்கும் நட்சத்திரங்கள் அழிந்தாலும் என் இதயத்தில் உன் காதல் அழியாது.
சுட சுட தேநீர் குடிக்கும்போது வாயிலே சுட்டால் என்னை நினை..

(சீ வெட்கமாக இல்லை உங்களுக்கு அடுத்தவன் காதல் கடித்ததை இப்படி சத்தமாக படிப்பதற்கு)

அது இது என்று எடுத்து விட்டு ஒரு கடிதம் எழுதி என்னுடைய பிரேமதாச புண்ணியத்திலே கிடைச்ச வெள்ளை துணியிலே, தைச்ச பள்ளிகூட உடுப்புக்குள்ளே, ஒளிச்சு வைச்சேன்.

அண்டைக்கு காலமை வழக்கத்துக்கு மாறாக, இரண்டு முறை அரை டிரம் தண்ணியிலே குளிச்சு, (வெட்டின அரை ட்ரம்ல தண்ணி நிரப்பி தான் குளிக்கிறது வழக்கம் ) அமத்தி அமத்தி இனிமேலே பல்லால கடிச்சு இழுத்தால் வரும் என்ற Fair அண்ட் lovely கிரீமை, கத்தியால இரண்டாக வெட்டி, இருந்த கிரீம் எல்லாம் எடுத்து முகத்திலே தடவி எட்டுமணிக்கே, சண்முகத்திண்ட சைக்கிள் கடையிலே வந்து நிண்டேன்.

மஞ்சளும் கறுப்பும் டை கட்டிய யாரை பார்த்தாலும் திவ்யாபோலவே இருந்தது. சத்தியமா அது தான் உண்மை. நீங்களும் நிண்டு பாருங்க நான் சொல்லுறது எவ்வளவு உண்மை என்று தெரியும்.

எங்கேயோ எமாலந்தி கொண்டு இருந்திட்டு திடீர் என்று திரும்பினால் வெண்ணிலாவும், என் திவ்யாவும் சைக்கிளுக்கு காத்தடிச்சு கொண்டு இருந்தாளுகள். அவளவை வெளிக்கிட நானும் விட்டு கலைச்சு கொண்டு, கலட்டி சந்தி, லேடீஸ் காலேஜ் சந்தி, நீராவியடி, நாவலர் சந்தி, என்று அவளுக்கு கிளைமோர் பாதுகாப்பு கொடுக்கிற மாதிரி நான் முதல்ல போய் சந்தியிலே நிண்டும் கடிதத்தை கொடுக்க முடியவில்லை. எப்படியும் வின்சன்ட் தியட்டரடி, அல்லது ஆஸ்பத்திரி பின் ரோடு, ஞானம் ஹோட்டலடியிலே ஆவது கொடுத்துவிட வேண்டும். அவளும் என்னை திரும்பி திரும்பி பார்த்தபடி தான் சைக்கிள் ஓடினாள்.

காத்துக்கு பறக்கும் வெள்ளை சட்டையை ஒரு கையால் அமத்தினபடி, சைக்கிளை ஒரு கையால் ஓடியபடி அவள் பின்னுக்கு திரும்பி பார்க்கும் அழகு இருக்கே, இதுக்கே நான் ஆயிரம் முறை அவளை லவ் பண்ணலாம் என்று தோணும்.

பழைய சயின்ஸ் ஹோலும் தாண்டியாச்சு, சீ ..சரியான தருணம் வாய்க்கலையே.

ஆஸ்பத்திரி மொச்சரி கால்வாய் மணத்துக்குள்ளே, எண்ட தெய்வீகமான காதல் கடிததத்தை கொடுக்க எனக்கு மனசு வரவில்லை.

வேம்படி சந்தியை விட்டால் நான் சென் ஜோன்சுக்கு மற்ற பக்கம் திரும்ப வேண்டும். என்ன ஆனாலும் சரி வேம்படி சந்தியிலே கொடுக்க வேணும் என்று, இதயம் 120 தரம் துடிக்க, எட்டி அவளின் சைக்கிள் காண்டிலை பிடிச்சன். வெண்ணிலா கொஞ்சம் பின்வாங்க நான் பொக்கேட்டுக்குள்ளே இருந்து கடிதத்தை எடுக்க... கறுப்பன் டோய் என்று கூப்பிட்டான்.

யாரிந்த கறுப்பன்..???

வேம்படி சந்தியிலே சிவப்பும் வெள்ளையும் பெயிண்ட் அடிச்ச, அரை ட்ரம்முக்கு மேலே, ஒரு வெள்ளை சொக்சை, கைக்கு மாட்டி கொண்டு,வெள்ளை ஹெல்மட்டையும் போட்டு கொண்டு கத்தரி தோட்டத்து வெருளி மாதிரி (என்ன மாதிரி..வெருளியே தான் ) ஒரு தமிழீழ காவல்துறை அதிகாரி நிற்பானே,அவன்தான் கறுப்பன். (கறுப்பன் எங்கட பட்ட பெயர் தான் அவனுக்கு உண்மையான பெயர் விக்னேஸ்வரனோ.. என்னமோ ).

அவனுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை...??

கொஞ்சம் பிளாஸ்பேக் போவோமா..

ஒரு ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள்கள் தினம்,எப்படியும் சுண்டுக்குளி பெட்டைகளுக்கு மை அடிச்சே தீருவது என்று, பழைய சிரிஞ்சுகுள்ளேயும், தையல் மெசினுக்கு விடுற சிங்கர் ஒயில் போத்திலுக்குள்ளேயும், ஹீரோ ப்ளூ ink கரைச்சு பள்ளிகூடத்திலே நாங்கள் தாக்குதலுக்கு ரெடி.

எங்கட ப்ரின்சி தனபாலோ ( இப்போ மறைந்து விட்டார் மன்னிக்கவும்), சுண்டுக்குளி பள்ளிக்கூடம் விட்டு 10 நிமிசத்துக்கு பிறகு தான் எங்கட பள்ளிக்கூடம் விடுறமாதிரி,டைம் டேபிள் போட்டு வைச்சிருந்தான். எங்கட ஹெட் மாஸ்டர் அந்தோனிப்பிள்ளையும், தான் தான் டிசிப்ளின் பொறுப்பாளர் என்று திரியும் சந்திரமௌலியும் எங்களை கண்கொத்தி பாம்பாக கண்காணிச்சு கொண்டு இருக்க, எண்ட பிரண்ட் தவேந்திரன் மணியடிக்கிற கணேசுக்கு கதையை கொடுத்து லைபிரரி வாசல்ல மறிச்சு வைக்க,நானும் முரளியும் கடைசி பெல்லை பத்து நிமிசத்துக்கு முதலே அடிச்சு போட்டம்.

கணேசு ஆரடா மணி அடிச்சது ... பேத்தை வண்டியை தள்ளி தள்ளி கொண்டு வருவதற்குள் பெடியள் எல்லாம் புத்தீசல் மாதிரி வகுப்பை விட்டு வெளியிலே ஓடிகொண்டிருந்தாங்கள்.

சரி நாங்களும் வந்திட்டம். சுண்டுக்குளி பெட்டைகளுக்கு கலைச்சு கலைச்சு மையடிச்சம்.நான் எப்படியும் கிப்பி எடுப்புகாரி கதரீனாவுக்கு மை அடிச்சே தீருவது ரக்கா ரோட்டால கலைச்சு கொண்டுவந்து, டெம்பிள் ரோட்டிலே வைச்சு அவளிண்ட கழுத்துக்கு நேராக (உண்மையிலே கொஞ்சம் கீழே தான்..) மையை சிரிஞ்சிலே இருந்து அடிக்க,அவளும் நான் அடிகிறதை பார்த்து குனிய, ICRC மூலையிலே, எங்கட கறுப்பன் கடலை போட்டு கொண்டிருந்த பெண்காவல்துறையின் முன் சட்டை எல்லாம் நீல ink வஞ்சகம் பாராது சீறி அடித்தது. அது தான் எனக்கும் கறுப்பனுக்குமான முதல் சந்திப்பு.

பிறகு என்ன.... கும்கி படத்திலே வாற கொம்பன் ரேஞ்சிலே அவனும், கோயில்யானை மாணிக்கம் ரேஞ்சிலே நானும்.

ஓல்ட் பார்க் காவல் நிலையத்திலே வைச்சு செவ்விளனி பச்சைமட்டை தும்பாக மாறுமட்டும் அடிச்சான். இனிமேலே என் கண்ணிலே மட்டும் மாட்டாதே என்று சொல்லி அனுப்பினான்.


நல்லூர் தீர்த்த திருவிழா.

அது மட்டும் கடற்சாராணனாக, சங்கிலியன் வீதியில் அறிவொளி தனியார் கல்லூரிக்கு முன்னால் , வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கண்காணிப்பு பணியில் பெட்டைகளுக்கு கலர்ஸ் காட்டி கொண்டிருந்த நான், தீர்த்தத்துக்கு மட்டும் விடுப்பு கேட்டு, கேணியிலே வேட்டி சால்வையுடன் பக்திமானாக தீர்த்தமாடி கொண்டு இருந்தேன்.

வயசு பசங்களுக்கு மட்டும் தெரியும் ஏன் நாங்கள் தீர்த்தாமடுவோம் என்று. கேணியின் படிகரையில் நிற்கும் பெண்களுக்கு தீர்த்த தண்ணியை அள்ளி எத்தி கொண்டு, அவளவையின் வெட்கத்திலும் சிரிப்பிலும் புண்ணியம் தேடி கொண்டு இருந்தோம.

நானும் எண்ட பிரண்டும் ஒரு ஐடியா போட்டோம். கேணிக்கு உள்ளே இறங்காமல் வெளியே நிக்கும் பிகருகளுக்கு சால்வைக்குள்ளே தண்ணியை அள்ளி கொண்டு போய் எத்துவோம் என்று. கடமையில் இருந்த காவல்துறையின் கண்ணிலே மண்ணைத்தூவி கொண்டு,சால்வைக்குள் தீர்த்த தண்ணியை எடுத்து கொண்டு,அழகான பிகர்களை இரண்டு சோடி கண்கள் தேடின (வேற யாரு நானும் என் பிரண்டும் தான்). கிடைச்சுது ஒரு சுப்பர் பிகர். கைகளால் ஒரு எத்து எத்தினோம். அந்த அழகான சேலையில் நனைந்து இன்னும் அழகாக தெரிந்தாள் . முகத்திலே சிரிப்பு மறைந்து கோப கோடுகள். அது கூட அழகாக தான் இருந்தன.

என்னங்க.. என்று யாரையோ கூப்பிட்டாள்.

இரண்டு முரட்டு கரங்கள் எங்கள் கழுத்தை இறுக்கின. மெதுவாக தலையை திருப்பி பார்த்தேன்.

கொ.....ம்.....ப.....ன் ...சீ சீ ..கறுப்பன்.

கறுப்பன் மனுசியா அவள்...

கடலை போட்ட பெட்டைக்கு மை அடிச்சதுக்கே பச்சை மட்டை தும்பானது.

என்ன இந்த முறை முத்திரைச்சந்தி பண்டிகைகால காவல் நிலைய தும்புத்தடி, மாவாக மாறி இருக்கும்.

அதை கூட எண்ட வாயால நீங்க கேட்கணுமா.. அவ்வளவு கல் நெஞ்சமா உங்களுக்கு..



சரி இப்போ நிகழ்காலத்துக்கு வாறன்..

கறுப்பன் என்னையும் அவளையும் மறிச்சு, வேம்படி சந்தி ஓரத்திலே நிக்க சொல்லிவிட்டு அவனின் வீதிகடமைக்கு போய்விட்டான். அண்டைக்கு பள்ளி கூடம் போற எல்லாரும் என்னையும் அவளையும் பார்த்தபடியே சென்றனர்.

வேம்படியில் டிசிப்பிளின் டீச்சர் என்று பெயர் போன எனது சித்தி மிசிஸ் ஜெயபாலன் உட்பட..

தொடரும்




(சில நாகரீகமற்ற வார்த்தைகள் இருந்தால் பெண்கள் என்னை மன்னிக்கவும், அந்த காலத்தில் எனக்கு இருந்த மனநிலையிலேயே இந்த கதையை எழுதி வருகிறேன்)

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.