April 30, 2016
பாரம்பரிய பழக்கவழக்கத்திலிருந்து சற்றும் மாறாத கிராமம்
2016ஆம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். ஆனால் இன்றும் பாரம்பரிய பழக்க வழக்கத்தில் இருந்து சற்றும் மாறாத கிராமம் ஒன்று உள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தும்பிபாடி கிராமத்தில் நுழைந்தபோது, காற்றில் மிதந்து வந்த பாடல், நமக்கு வரவேற்பு அளிப்பதாய் அமைந்திருந்தது. அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொம்மக்காள். வீட்டில் சமையல் செய்து கொண்டே பாடி கொண்டு இருந்தவரிடம் பேச முற்பட்டோம், எதற்கும் செவி சாய்க்காமல் தொடர்ந்து பாடி கொண்டே இருந்தார். மூதாட்டியான பொம்மக்காளின் செய்கை இப்படியென்றால், இந்த நூற்றாண்டிலும், உயிருடன் இணைந்த உடலாய், தங்களுடைய பாரம்பரியத்தை விடாமல் தொடரும் தும்பிப்பாடி கிராம மக்கள் யாரும் முகம் கொடுத்தே பேசவில்லை.
நீண்ட முயற்சிக்கு பின் நம்மிடம் சிலர் பேசினர். திரைப்படங்களில் உருவகப்படுத்தப்படும் கிராமத்தின் வடிவத்திற்கு சற்றே குறையாமல், தொட்டிய நாயக்கர் என்றழைக்கப்படும் இந்த சமூகத்தினர் வசிக்கும் பகுதிகள் பழமை மாறாமல் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பொம்மக்காள் என்ற பெண் தெய்வத்தை தங்களுடைய குலதெய்வமாக வழிபடும் இந்த சமூகத்தை சேர்ந்த மக்கள், தங்களுடைய மூதாதையர் அறிவுரையை இன்றைய நவீன காலத்திலும் தவறாமல் பின்பற்றி வருகின்றனர்.
பெண்கள் அனைவரும் ரவிக்கை அணியாமல் காட்சியளிப்பதோடு, அன்னிய ஆடவர்களிடம் முகம் கொடுத்தும் பேசுவதில்லை. மேலும், அனைவரின் பெயரும் பொம்மக்கா என்று அவர்களுடைய குலதெய்வப் பெயராலேயே அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் வீட்டைத் தவிர வேறு எங்கும் தங்குவதில்லை, பெண்கள் பருவ வயதிற்கு பின்னர் கல்வி கற்கக்கூடாது, வெளியூருக்கு வேலைக்கு செல்லக்கூடாது என்பன போன்ற சில விவாதத்திற்குரிய அம்சங்களும் ஊர்க்கட்டுப்பாட்டில் உள்ளன.
5 முதல் 6 வயதிற்குள்ளாகவே திருமணம் செய்து வைத்த நிலை தற்போது மாறி இருக்கிறது. கால மாற்றம் காரணமாக தற்போது பருவத்தை எட்டிய பெண்களுக்கு மட்டுமே திருமணம் செய்துவைக்கின்றனர் தொட்டிய நாயக்கர் சமூகத்தினர்.
கிராமத்தில் திருமணத்தின் போது பெண் வீட்டாருக்கு, மணமகன் தரப்பில் 25 ஆயிரம் ரூபாய் வரதட்சணை தர வேண்டும் என்பதும், மணமகளுக்கான நகைகளையும் அளிக்க வேண்டும் என்பதும் பெண்களுக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை விளக்கிடும் சான்றுகளாக திகழ்கின்றன.
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழியை கலந்து பேசும் இந்த கிராம மக்கள் எந்த காலத்திலும் தங்களுடைய பாரம்பரியத்தை விட்டு விலகுவதில்லை என்பதற்கு அவர்கள் அணியும் உடையே மெளன சாட்சியாக உள்ளது. கிராம மக்களின் பொழுது போக்கு காலை மாலை நேரங்களில் ஒன்று சேர்ந்து கும்மி அடித்து பாடுவது இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்த சமூகத்தை சேர்ந்த ஆண்கள் மது அருந்தினால் அவர்கள் ஊரை விட்டு விலக்கப்படுகிறார்கள். வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய அனுமதியில்லை, எந்த ஒரு முக்கிய முடிவிற்கும் ஊரில் உள்ள மூத்த குடிமக்களின் அனுமதி பெற வேண்டும் என்பது உள்ளிட்ட இன்றைய நவீன உலகில் வேறெங்கும் காணகிடைக்காத காட்சிகளாகும்.
செல்லிடப்பேசி, வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி என நவீன தொழில்நுட்பங்கள் மெல்ல மெல்ல இந்த கிராமத்திற்குள் நுழைந்தாலும் அதற்கான அளவை ஊர்க்கட்டுப்பாடுதான் தீர்மானிக்கிறது. சமையல் அறையில் கேஸ் சிலிண்டர் முறை வந்துள்ளதுடன், ஆண்கள் கல்லூரி படிப்பிற்கு அனுப்பும் அளவிற்கு நடைமுறை மாறி வருகிறது. பழந்தமிழரின் பண்பாட்டினை தவறாமல் கடைப்பிடிக்கும் தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் சேலம் மாவட்டத்தில் மேச்சேரி, சாத்தப்பாடி, வீரபாண்டி, பாரப்பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக வசித்து வருகின்றனர்.
தங்களுடைய பிரதான பழக்க வழக்கங்களை அனைத்து சமூகத்தினரும் பின்பற்றக்கூடிய வகையில் தொட்டிய நாயக்கரர்களின் பழக்கங்கள் அமைந்திருந்தாலும், பெண் குழந்தைகளை படிக்க வைக்கும் விஷயத்தில் மாற்றம் வேண்டும் என்பதே அந்த சமூகத்தைச் சேர்ந்த இளம் தலைமுறையின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பாரம்பரிய பழக்கவழக்கத்திலிருந்து சற்றும் மாறாத கிராமம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 30, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 30, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.