Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 18, 2016

முதல் காதல் என்றும் மறக்க முடியாது.




ஒரு பச்சை சுடிதாரில், நான் குட்டி பிள்ளையாருக்கு வைச்ச ரோசாப்பூவை தலைக்கு வைச்சபடி திவ்யா என்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள். கூட வந்த வெண்ணிலாவும் பாதியிலே நின்றுவிட்டாள். நான் கோயில் சுவர் ஒன்றிலே சாய்ந்தபடி ஒரு தலைராகம் விஜயன் போல கோயில் கூரையை  பார்த்து கொண்டு இருந்தன். 

நண்பன் தான் சுரண்டி மச்சான் உன்னட்ட தாண்டா வாறாள்.. என்றான். நான் சீ அப்படி இருக்காது அவளாவது என்னட்ட வராத.... நான் சொல்லி முடிக்கவில்லை எண்ட ரோசாப்பு வாசம்.

எண்ட நண்பன் கழண்டிட்டான். அவளோ எனக்கு முன்னால.. 
ஹோம்வொர்க் செய்யாமல் வகுப்பு வாத்திக்கு முன்னால நிக்கறமாதிரி கால் பெருவிரலை மடிச்சு கொண்டு, கையிலே நெட்டி முறிச்சு கொண்டு இருந்தாள். 
உள் காச்சல் ... உள்  காச்சல் என்று ஒண்டு  சொல்லுவாங்கள் கேள்விப்பட்டிருக்கிறீங்களே..
நீங்கள் கேள்விபடாட்டியும் பரவாயில்லை. எனக்கு உள் காய்ச்சலுங்கோ.. வெளியிலே சாதராணமாக இருக்கும் உடம்பு உள்ளுக்குளே 107 ல காயும்.

என்ன பேசுறது என்று தெரியவில்லை.

என்ன திவ்யா மோதகம் ஏதும் வேணுமே ..?? என்று திக்கு தடுமாறி கேட்ட போது... 

அண்ணா ... அண்ணா ...

என்ன திவ்யா இப்படி கூப்பிட்டவளோ என்று சந்தோஷபடாதீங்கள். 

அது எண்ட தங்கச்சி,  நல்ல கனவையும் குழப்பி, இண்டையான் எண்ட பிளானையும் குழப்பிறத்துக்கு  எண்டே வெளிகிட்டு நிண்டாள்  , திருவெம்பா பாட போறதுக்கு.
எனக்கு வந்த கோவத்துக்கு பிள்ளையாரை தான் மனசுக்குள்ளே தூசனத்தாலே திட்டினேன். ( நீங்களும் எண்ட நிலையிலே இருந்ததால் அப்படி தான் திட்டி இருந்திருப்பீன்கள்)


நான் பெரிய பாட்டுக்காரன் இல்லை. எனக்கு வேலை சேமக்கலம் அடிக்கிறது.
ஒவ்வொரு பாட்டும் முடியும் போது ஒருத்தன் சங்கு ஊதுவான், ஒருத்தன் மணி அடிப்பான், நான் தோசைகல்லு மாதிரி வட்டமா ஒரு பிளேட் இருக்கும் அதுக்கு பெயர் சேமக்கலம் அதை போட்டு மொங்கு மொங்கு என்று மொங்கிறது .

திவ்யா, வெண்ணிலா, எண்ட தங்கச்சி, நாலைஞ்சு கிழடுகள் சேர்ந்து பாட்டை பாடும், நாங்கள் இடைக்கிடை பாடுவம், இல்லை ஆலேலோஎம்பாவாய் என்று கடைசி வரியை மட்டும் பிலத்து  பாடிபோட்டு சேமக்கலத்தை அடிக்கிறது தான்.

எண்ட குரல் ஒன்றும் பெரிய பாலசுப்ரமணித்திண்ட குரல் மாதிரி இருக்காது. பச்சை விளாங்காயை உப்போட அல்லது பச்சை மிளகாயோட சாப்பிட்டு போட்டு தண்ணி விடாய்கேக்க ஆலாபனை பாடினால் எப்படி இருக்குமோ அப்படி  தான் இருக்கும் எண்ட குரல்.

உண்மையா தான் அண்ணே.. நான் "மண்ணில் இந்த காதல் அன்றி" பாட்டை பாடமாக்கி போட்டு அம்மா, தங்கச்சி, அண்ணா ஒருத்தரும் வீட்ல இல்லாத நேரமாய் பார்த்து கத்தி பாடினேன் பாருங்க, அம்மா அந்த காலத்திலே அறுநூறு ரூபாய் கொடுத்து  வாங்கி கொண்டுவந்த, ஒரு அலுசேசன் குறஸ் நாய் சங்கிலியை அறுத்து கொண்டு ஓடிட்டு. இண்டைக்கு மட்டும் அம்மாக்கு தெரியாது ஏன் நாய் வீட்டை விட்டு ஓடினது என்று. அம்மாவுக்கு நட்டம் 750 ரூபாய். நாய் 600 ரூபாய் சங்கிலி 150 ரூபாய்.

திவ்யா கூட்டம் , பாடும்போது நானும் பிலத்து பாடுவேன். அவள் என்னை பார்த்து ஒரு புன் சிரிப்பு ஒன்று சிரிப்பாள் பாருங்கோ, அவள் பாடாமல் சிவபெருமானை பார்த்து அப்படி சிரிச்சாலே போதும் அவர் பள்ளி எழுந்திடுவார் என்று தான் எனக்கு தோணும். 
அம்மா பூவரசந்தடியாலை அடிச்சும், எனக்கு "கூற்றாயினவாறு" தேவாரம் கூட வராத எனக்கு திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பா எல்லா பாட்டும் பாடமாக்கினேன் என்றால், அது மாணிக்கவாசகரின் அதிசயங்களில் ஒன்று எண்டு மட்டும் நெனைச்சு போடாதேயுங்கோ. எல்லாம் எண்ட  திவ்யாவுக்காக மட்டும் தான். 

ஒன்று இரண்டு வீடுக்காரர் எழும்பி ப்ளைன்ரீ, பால் ரீ போட்டு தருவினம். பாடுற பிள்ளைகளுக்கு தான் முதல்ல குடுப்பினம், எண்ட தங்கச்சி கூட எனக்கு தர முதல் குடிப்பாள், ஆனால் திவ்யா..அவளிண்ட ரீ யை எனக்கு தந்திட்டு அவள் திரும்ப வாங்கி குடிப்பாள். எண்ட நண்பன்கள் காலை சுரண்டுவாங்கள்.  நீங்களே சொல்லுங்க இதுக்கு பெயர் தான் காதலா ..??? பிளீஸ் ஹெல்ப் மீ ....!!!

ரீ தாற  விட்டுக்காரர் சில நாட்களில் தரமாட்டினம்,  என்ன பிரச்சனையோ எங்களுக்கு தெரியாது. ஆனால் அந்த வீடுகள் வந்த உடனே பிலத்து பாடுறதும். சங்கை பலமா ஊதுறதும், சேமகலத்தை மொங்கிறதும்  எங்களுக்கு வாடிக்கையா போச்சு.

ஒரு மாதிரி திருவெம்பாவும் முடிஞ்சு போச்சு..எப்படா எண்ட காதலை சொல்லுறது.

நண்பன் ஒரு ஐடியா சொன்னான். மச்சான் அவள் வேம்படி, நீ சென் ஜோன்ஸ் , போற வழியிலே தானே, பள்ளிக்கூடம் போகும்போது கொடு என்றான்.

அதுவே வினையாகும் என்று தெரியாமல் அவளுக்கான என் முதல் காதல் கடிதத்தை எழுத ஆரம்பித்தேன் ..

தொடரும் 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.