“இயந்திரகதியான வாழ்க்கை வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலானவர்களை மன அழுத்தம் எளிதில் ஆட்கொண்டு விடுகிறது. அதனால் மனம் விட்டுப் பேசி மகிழ்ச்சியை பொங்க வைக்கும் சிரிப்பை தொலைத்து, விதவிதமான வியாதிகளை அழையாத விருந்தாளியாக அழைத்து கொள்கிறோம். கவலை, மன அழுத்தத்தில் இருந்து நம்மை விடுவித்து மனதை மகிழ்ச்சிப்படுத்தும் அருமருந்து சிரிப்பு” என்று கூறும் சம்பத் தோற்றத்திலே வித்தியாசமாக இருக்கிறார். சிந்தனையிலும், செயலிலும் வித்தியாசத்தை உருவாக்கும் விதத்தில் இவர் ‘சிரிப்பு யோகா’ என்பதனை வடிவமைத்து உள்ளார். யோகாசனத்தில் நகைச்சுவையை கலந்து இவர் உருவாக்கி இருக்கும் எளிய பயிற்சி முறைகள் பலரையும் கவர்கிறது. சிரிப்பானந்தா என்று நகைச்சுவை உணர்வாளர்களால் அறியப்படும் இவர் பல்வேறு இடங்களில் தன்னுடைய சிரிப்பு யோகாவை அரங்கேற்றி வருகிறார். ஏராளமான சிரிப்பு மேடை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
அவரது பேட்டி:
வழக்கமான யோகாவுக்கும், சிரிப்பு யோகாவுக்கும் என்ன வித்தியாசம்?
‘‘யோகாசனத்தில் மூச்சு பயிற்சி முக்கிய அங்கம் வகிக்கும். ஆசனம் செய்யும்போது வெளியிடும் மூச்சு காற்றுடன் சிரிப்பையும், ஆனந்தத்தையும் கலப்பதுதான் சிரிப்பு யோகா. இதை எல்லா வயதினரும் எளிமையாக செய்யலாம்’’
சிரிப்பதால் கிடைக்கும் பலன்?
‘‘நமது நுரையீரலில் இருக்கும் காற்றறைகளில் 6.8 லிட்டர் காற்று நிரம்பி இருக்கிறது. நாம் சாதாரணமாக சுவாசிக்கும்போது 0.8 லிட்டர் அசுத்த காற்று (கார்பன்டை ஆக்ஸைடு) வெளியேறி அதே அளவில் ஆக்ஸிஜன் உட்புகும். ஆனால் நாம் வாய் விட்டு சிரிக்கும்போது 4 லிட்டருக்கும் அதிகமான அசுத்த காற்று வெளியேறி அதிகமாக ஆக்ஸிஜன் உள் நுழையும். அதன் மூலம் அதிக அளவு பிராணவாயு ரத்தத்தில் கலக்கும். அதன் காரணமாக அனைத்து செல்களும் புத்துணர்ச்சியுடன் இயங்கும். அந்த அளவுக்கு, சிரிக்கும்போது உயிர்செல்களின் அடிப்படை செயல்பாடு மாறிவிடு கிறது. ஆக்ஸிஜன் குறைவாகும்போது உடல் சோர்வாக காணப்படும். அசுத்த காற்று அதிகமாக தங்குவதுதான் வியாதிகள் உருவாகுவதற்கு தொடக்கமாக அமைந்து விடுகிறது. வாய் விட்டு சிரித்தால் நோய் நெருங்காது. மேலும் சிரிக்கும்போது என்டோபின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. அது பயம், மன அழுத்தத்தை போக்கி மனதை சாந்தப்படுத்தும். சிலர் மற்றவர்கள் முன்பு சிரிக்கலாமா? அதனால் தனது அந்தஸ்துக்கு இழுக்கு ஏற்பட்டு விடாதா? என்று நினைக்கிறார்கள். சிரிப்பை அடக்கி வைக்கக்கூடாது. அப்படி செய்வது மன அழுத்தம் ஏற்பட காரணமாகிவிடும். சிரித்து மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருப்பவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் துறையில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். வெற்றியாளர்கள், சாதனை படைத்தவர்கள், பிரபலமானவர்களிடம் நகைச்சுவை உணர்வும் இருக்கும். மனம் விட்டு சிரிக்கும்போது உள் உறுப்புகள் அனைத்தும் உற்சாகமாக இயங்கி ஒட்டுமொத்த செல்களின் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையை உற்சாகமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படும். அனுசரித்து போகும் தன்மை அதிகரிக்கும். பிரச்சினைகளை எளிதாக கையாளும் தைரியம் பிறக்கும்’’
சிரிப்பை யோகாசனத்திற்குள் புகுத்தும்போது அதன் தன்மை மாறிவிடாதா?
‘‘நிச்சயமாக மாறாது. பொதுவாக ஆசனம் செய்யும்போது மூச்சை உள் இழுத்து வெளியே விடுவோம். அப்படி மூச்சை வெளிவிட்டு ஆசனத்தை நிறைவு செய்யும்போதுதான் சிரிப்பை வெளிப்படுத்துகிறோம். அது மகிழ்ச்சியுடன் ஆசனத்தை நிறைவு செய்த திருப்தியையும் கொடுக்கும். உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியையும் தருவதாக அமையும். மேலும் முழுமையாக யோகாசனத்தை சார்ந்து அல்லாமல் இயல்பாக நாம் செய்யும் செயல்களிலும் சிரிப்பு யோகாவை புகுத்தி இருக்கிறோம். சிரிப்பு யோகாவில் 320 பயிற்சிகள் இருக்கின்றன. நடை பயிற்சி செய்வது, கார் ஓட்டுவது, ஆட்டோ ஓட்டுவது போன்று நடிக்கும்போது மூச்சு பயிற்சி, சிரிப்பு, ஆசனம் ஆகிய மூன்றையும் செய்துவிடலாம். சிரிப்பிலும் நடராஜ் சிரிப்பு, சிம்ம சிரிப்பு, பெங்குயின் சிரிப்பு, கைத்தட்டல் சிரிப்பு, யோகி பார்வை சிரிப்பு என பல வகைகள் இருக்கின்றன. நடராஜ் சிரிப்பு என்பது ஏகபாத ஆசன வகையை சார்ந்தது. ஒரு காலை மற்றொரு காலின் மூட்டின் மீது வைத்து கைகளை தலைக்கு மேல் சாமி கும்பிடுவது போன்று வைக்க வேண்டும். சிம்ம சிரிப்பு என்பது நாக்கை ஆக்ரோஷமாக வெளியே நீட்டி கர்ஜிப்பதாகும். அப்படி செய்யும்போது மூச்சு நன்றாக உள்ளும், வெளியேயும் இழுக்கப்படும். அதன் மூலம் ஆஸ்துமா வருவது தடுக்கப்படும். யோகாசனத்தை போல சிரிப்பு யோகாவிற்கு முழுமையான புத்தகங்கள் இல்லை. அதுதொடர்பான புத்தகம் எழுத முயற்சித்து வருகிறேன்’’
மாணவர்கள் சிரிப்பு யோகாவை கற்பதனால் கிடைக்கும் பலன் என்ன?
‘‘நான் நூறுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் சிரிப்பு யோகா பயிற்சி அளித்திருக்கிறேன். ஆசனம் சிரிப்பை மையப்படுத்தியதாக இருப்பதால் ரசித்து செய்கிறார்கள். இந்த யோகா செய்யும்போது மூளை புத்துணர்வுடன் செயல்பட தூண்டும். அது படிப்பு சம்பந்தமான மன அழுத்தம், பயத்தை போக்குவதாக அமையும். படித்த பாடங்களும் எளிதில் மனதில் பதியும்’’
இதற்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கிறது?
‘‘ஆரம்பத்தில் சிரிப்பரங்கத்திற்கு வந்த பெண்கள் சிரிப்பு யோகாவை செய்வதற்கு தயக்கம் காட்டினார்கள். அவர்களுக்கு தனியாக பயிற்சி கொடுத்தோம். அதனை கற்றுக்கொண்டவர்கள், ‘இவ்வளவு நாள் இதுபற்றி தெரியாமல் இருந்து விட்டோமே?’ என்கிறார்கள். நான் வேலூர் சிறையில் கைதிகளாக இருக்கும் பெண்களுக்கும் சிரிப்பு யோகா பயிற்சியை வழங்கி இருக்கிறேன். முதலில் அவர்களிடம் பேசுவதற்கு தயக்கமாக இருந்தது. ஆனால் நான் யோகா செய்வதை பார்த்து அவர்கள் மனம் விட்டு சிரித்தார்கள். பெண்களின் உடல் நிலை சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு சிரிப்பு யோகா தீர்வாக அமையும். அவர்களிடம் தன்னம்பிக்கை வளரும். அறிவுத்திறன் மேம்படும்’’
ஜோக் கேட்டு சிரிப்பதற்கும், சிரிப்பு யோகா மூலம் சிரிப்பதற்கும் என்ன வித்தியாசம்?
‘‘பொதுவாக ஜோக் என்பது யாராவது ஒருவருடைய மனதை புண்படுத்தும்படி இருக்கும். ஆனால் சிரிப்பு யோகா யாரையும் புண்படுத்தாது. ஒரு ஜோக் சொன்னால் சிலர் சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். ஒருசிலரோ விழுந்து விழுந்து சிரிப்பார்கள். தன்னிடம் பேசுபவரிடம் அவருடைய கண்களை பார்த்து பேசாதவர் நகைச்சுவை உணர்வு குறைந்தவராகவே இருப்பார். வீட்டில் மனைவியிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு கணவரிடம் இல்லாமல் போனால் பலனில்லை. இருதரப்பினரிடையேயும் நகைச்சுவை உணர்வு இயல்பாக இருக்க சிரிப்பு யோகாசன பயிற்சி பலன் கொடுக்கும்’’ என்கிறார்.
இவர் சென்னை அம்பத்தூர் பகுதியில் அப்பப்போது சிரிப்பு யோகா நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.