Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 10, 2016

மருத்துவரின் சீடன்!-சிறுகதை


ஓர் ஊரில் மருத்துவர் ஒருவர் இருந்தார். சுற்றி உள்ள ஊர்கள் பலவற்றிற்கும், அவரை விட்டால் வேறு ஆள் இல்லை. தனக்குத் துணையாகவும், தன் தொழிலைத் தெரிந்து கொள்ளவும் சீடன் ஒருவனை வைத்துக் கொண்டார். எங்கே சென்றாலும் இருவரும் சேர்ந்தே சென்றனர்.
மருத்துவன் மிகவும் புத்திசாலி. ஆனால், சீடனோ அவருக்கு நேர் மாறாக இருந்தான்.
ஒருநாள் இருவரும் மருத்துவம் செய்ய ஒரு வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கே ஐம்பது வயது முதியவர் ஒருவர் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் மருத்துவனால் கோபத்தை அடக்க முடியவில்லை.
""உமக்கு என்ன வயது ஆகிறது? பனங்கிழங்கைச் சாப்பிட்டுவிட்டு அதனுடன் வாழைப்பழம் சாப்பிடலாமா? பனங்கிழங்கு பித்தம் ஆயிற்றே. நீரே உடம்பைக் கெடுத்துக் கொண்டால் யார் என்ன செய்ய முடியும்? நான் சொல்வது போலக் கேட்டால் உடம்பு சரியாகும். என்ன சொல்கிறீர்?'' என்று கோபத்துடன் கேட்டார்.
""நீங்க என்ன சொல்றீங்களோ அதையே செய்கிறேன். என் உடம்பு சரியானால் போதும்,'' என்றார் அவர்.
""அப்படியானால் இந்தச் சூரணத்தைச் சாப்பிடு. இரண்டு நாட்கள் பட்டினி கிடக்க வேண்டும். மிகுந்த பசியாக இருந்தால், கஞ்சி மட்டும் சாப்பிடலாம்,'' என்றார் மருத்துவன்.
மருத்துவனுக்குத் தர வேண்டிய பணத்தை அவர் தந்தார். இருவரும் வெளிய வந்தனர்.
சீடனால் வியப்பை அடக்க முடியவில்லை.
""மருத்துவத்தோடு உங்களுக்குச் சோதிடமும் தெரியுமா?'' என்று கேட்டான்.
""ஏன் அப்படிக் கேட்கிறாய்?'' என்றார் மருத்துவன்.
""அந்த நோயாளி பனங்கிழங்கும், வாழைப்பழமும் சாப்பிட்டு இருக்கிறான். அதனால்தான் வயிற்று வலி வந்து உள்ளது என்று எப்படிச் சரியாகச் சொன்னீர்கள்?'' என்று கேட்டான்.
""அதுவா? நாம் மருத்துவம் பார்ப்பதோடு அல்லாமல், பகுத்தறிவையும் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் தொழிலில் வெற்றி பெற முடியும்.
""நான் அங்கே சென்றவுடன் அங்கிருந்த குப்பையைக் கவனித்தேன். அதில் ஏராளமான பனங்கிழங்குத் தோல்கள் கிடந்தன. படுக்கையின் அருகே நாலைந்து வாழைப் பழத்தோல்கள் கிடந்தன.
""இப்படிச் சொல்வது பகுத்தறிவுதானே தவிர, சோதிடம் கிடையாது,'' என்றார் மருத்துவன்.
சீடனுக்கு உண்மை புரிந்தது.
சில நாட்கள் சென்றன. மருத்துவனுக்கு உடல் நலம் இல்லாமல் போய்விட்டது.
அப்போது மருத்துவன் வீட்டுக்கு வந்த ஒருவன், ""ஐயா! எங்க முதலாளிக்கு உடம்பு சரியில்லை. நீங்க உடனே வரணும்!'' என்றான்.
சீடனை அழைத்த மருத்துவன், ""எனக்கு உடம்பு சரியில்லை. நீ இந்த ஆளுடன் செல். நோயாளியைப் பார்த்து மருந்து கொடுத்துவிட்டு வா,'' என்றார்.
சீடனும் புறப்பட்டான்.
நோயாளி படுக்கையில் படுத்தபடி முனகிக் கொண்டிருந்தான்.
சீடன் நோயாளியின் கை நாடியைப் பார்த்தான். நாக்கை நீட்டச் சொன்னான். நோயாளிக்கு காய்ச்சல் அடிப்பது அவனுக்குப் புரிந்தது.
தன் முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு, ""இவ்வளவு பெரிய ஆளாக இருக்கிறாயே. கொஞ்சமாவது அறிவு இருக்க வேண்டாம். குதிரைக் கறியை மனிதர்கள் சாப்பிடுவார்களா? அதுவும் ஒரு முழுக் குதிரையைச் சாப்பிட்டு இருக்கிறாய்.
""நான் மட்டும் சிறிது நேரம் சென்று வந்திருந்தால் உன்னைக் காப்பாற்றவே முடியாது,'' என்று கோபம் கொண்டவன் போல் கத்தினான்.
வீட்டிலிருந்த பெரியவர் ஒருவர், ""மருத்துவரைக் கூப்பிட்டு வரச் சொன்னால் பைத்தியத்தை கூப்பிட்டு வந்திருக்கிறாயே,'' என்று அந்த வேலையாளைத் திட்டினார்.
எல்லாரும் சேர்ந்து சீடனை அடிக்கத் தொடங்கினர். தப்பித்தோம், பிழைத்தோம் என்று வீடு வந்து சேர்ந்தான்.
நடந்ததை எல்லாம் மருத்துவனிடம் சொன்னான் சீடன்.
""நீ எதனால் நோயாளி குதிரைக் கறி சாப்பிட்டதாகச் சொன்னாய்?'' என்று கேட்டார் மருத்துவன்.
""நீங்கள் சொன்ன பகுத்தறிவினால் வந்த வினைதான் அது. நான் நோயாளி வீட்டுக்குள் நுழைந்ததும் குப்பையைப் பார்த்தேன். அங்கே ஒன்றும் இல்லை. படுக்கைக்குக் கீழே பார்த்தேன். அங்கும் ஒன்றும் இல்லை.
""அந்த அறையைச் சுற்றி நோட்டம் விட்டேன். குதிரைத் சேணம் மட்டும் மாட்டி இருந்தது. குதிரை இல்லை. அதனால் குதிரைக் கறி சாப்பிட்டதாகச் சொன்னேன்,'' என்றான் சீடன்.
சீடனின் முட்டாள்தனமான செயலைக் கேட்டு அழுவதா, சிரிப்பதா என்று தெரியாமல் விழித்தார் மருத்துவர்.
***

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.