Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 21, 2016

'டேய்... நான் முதலமைச்சர் தொகுதிடா, வேலைய கொடுடானு உரிமையோட கேளுங்க!' - அன்புமணி


பென்னாகரத்தில் என்னை வெற்றி பெற வைத்தால், நீங்களெல்லாம்,  'டேய் முதலமைச்சரே எங்க தொகுதிடா.. வேலைய கொடுடா' னு உரிமையோட கேட்கலாம் என்று பாமக செயல்வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் அன்புமணி அனல் கிளப்பும் வகையில் பேசினார்.

பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி, தான் போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டத்தை இன்று கூட்டினார். பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் முதலில் பேசிய முன்னாள் எம்.பி.யும், தருமபுரி வேட்பாளருமான டாக்டர் செந்தில், "50 ஆண்டுகளாக  மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளால் எந்த மாற்றமும் வரவில்லை. அண்ணா ஆண்டாலும், கருணாநிதி ஆண்டாலும், ஜெயலலிதா ஆண்டாலும், யார் ஆண்டாலும் ஒன்றுதான். ஏனென்றால் இவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி செயல்படக்கூடியவர்கள். இதுவரை கிடைக்காத முதலமைச்சர் வேட்பாளர் நமக்கு கிடைத்துள்ளார். அன்புமணி நமக்கு கிடைத்திருப்பது வரலாற்று சாதனை. இதுவரை யாரும் சொல்லாததை அன்புமணி சொல்லியிருக்கிறார். விவசாயிகளை கடவுள் என்று சொல்லியிருக்கிறார்.

முதல்முறையாக ஒரு விவசாயி முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை நாம் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து வரலாற்று சாதனை படைக்க வேண்டும். விஜயகாந்துக்கு எதிராக பாலுவை நிறுத்தியிருக்கிறோம். விஜயகாந்த்தின் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்தது விருதாச்சலத்தில்தான். நமது வேட்பாளரை தோற்கடித்துதான் அவர் இந்த அளவுக்கு வளர்ந்து நிற்கிறார். நாம் செய்த தவறை நாம்தான் சரி செய்ய வேண்டும். வழக்கறிஞர் பாலு கட்டாயமாக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். நாம் வளர்த்துவிட்ட விஜயகாந்த்தை நாமே வீட்டுக்கு அனுப்ப வேண்டும்" என்று முடித்தார்.

அடுத்ததாக பேசிய அன்புமணி, "யோசித்துப்பாருங்கள், உங்கள் தொகுதியில் போட்டியிடுவது முதலமைச்சர் வேட்பாளர். இதுவரை எந்த முதலமைச்சராவது இந்த தொகுதிக்கு வந்திருக்கிறார்களா? இல்லை. உங்கள் கையில்தான் தமிழகத்தின் எதிர்காலமே இருக்கிறது. இரண்டாவது முறையாக வாய்ப்புக்கேட்டு வந்துள்ளேன். முதல்முறை  நாடாளுமன்றத் தேர்தலுக்கு வந்தேன். என்னை வெற்றி பெற வைத்தீர்கள். பென்னாகரம் தொகுதியில் ஒரு கிராமம் கூட விடாமல் அத்தனை கிராமங்களுக்கும் சென்று நன்றி தெரிவித்திருக்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் என்னால் ஒரு சில பகுதிகளுக்கே செய்ய முடியும். ஆனால் முதலமைச்சராகிவிட்டால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் செய்யலாம். ஸ்ரீரங்கம் தொகுதியில் பார்த்தீர்களா..? எத்தனை சாலைகள், எத்தனை கோடி திட்டங்கள். ஸ்ரீரங்கம் என்ன, அதைவிட பிரம்மிக்கத்தக்க வகையில் பென்னாகரத்தை மாற்றுவேன். நீங்களெல்லாம், 'டேய் முதலமைச்சரே எங்க தொகுதிடா.. வேலைய கொடுடா' னு உரிமையோட கேட்கலாம்" என்று  அனலைக் கிளப்பிவர், "நாம் செய்யவிருக்கும் திட்டங்களைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள், நாம் மகத்தான வெற்றிபெற வேண்டும்" என்ற படி முடித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.