பெரம்பூர், ரமணா நகர், சோமசுந்தர விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (36), அதிமுக பிரமுகர். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர், அதே பகுதியில் உள்ள வீடுகளுக்கு, அரசு கேபிள் இணைப்பு கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். மேலும், 69வது வட்ட செயலாளர் லில்லி கல்பனாவின் வலது கரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று காலை ரமேஷ், மாதவரம் நெடுஞ்சாலையில் பிருந்தா தியேட்டர் எதிரே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு 3 பைக்குகளில் வந்த 6 பேர், திபுதிபுவென டீக்கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த ரமேஷை சுற்றி வளைத்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினர்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க, ரமேஷ் கடைக்கு வெளியே வந்து சாலையில் ஓடினார். ஆனால் மர்மநபர்கள், அவரை விரட்டி சென்று தலை, கை, கால், முதுகு, கழுத்து உள்பட உடல் முழுவதும் சரமாரியாக வெட்டினர். சிறிது நேரத்தில் ரமேஷ், நிலை குலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதை பார்த்ததும், டீக்கடையில் இருந்தவர்களும், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களும் அலறியடித்து கொண்டு ஓடினர். உடனே மர்மநபர்கள், பைக்கில் தப்பிவிட்டனர். தகவலறிந்து செம்பியம் இன்ஸ்பெக்டர் உக்கிரபாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரமேஷை மீட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், 69வது வார்டு பெண் வட்ட செயலாளர் லில்லி கல்பனாவின் அனைத்து கட்டப்பஞ்சாயத்து மற்றும் பண பரிமாற்ற பணிகளையும் ரமேஷ் மேற்கொண்டு வந்தார். இதனால், அதிமுகவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு, பலருடன் அவருக்கு முன்விரோதம் உருவானது. மேலும், அதே பகுதியில், அதிமுக கவுன்சிலர் ராஜயின் கணவர் வெற்றிவேந்தன், மகேஷ் என்பவர் உள்பட 4 பேர் அரசு கேபிள் நடத்துகின்றனர். இதனால், அவர்களுக்குள் தொழில் போட்டி உள்ளது.
கடந்த மாதம், வெற்றிவேந்தன் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு ரமேஷ் கேபிள் டிவி இணைப்பு கொடுத்துள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வெற்றிவேந்தன், திருவிக நகர் போலீசில் புகார் செய்துள்ளார் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார், தொழில் போட்டியில் ரமேஷ் வெட்டப்பட்டரா அல்லது கட்சியின் கோஷ்டி பூசலில் அவரை கொலை செய்ய முயன்றார்களா, கட்டப்பஞ்சாயத்து செய்ததில் ஏற்பட்ட முன்விரோதத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இதனை செய்தார்களா என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். இதற்கிடையில் அதிமுக கவுன்சிலர் ராஜயின் கணவர் வெற்றிவேந்தன் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.