Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 11, 2016

தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தே.மு.தி.க. தொண்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி


மக்கள் நல கூட்டணியில் இருந்து வெளியேறி, தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தே.மு.தி.க. அலுவலக வாசலில் தொண்டர் ஒருவர் விஷம் குடித்தார்.

தி.மு.க. கூட்டணி

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இதற்காக நேற்று காலை முதல் தே.மு.தி.க. தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் குவிந்திருந்தனர்.

அப்போது திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரை சேர்ந்த மணிராஜ்(வயது 40) என்பவர் கையில் துண்டு பிரசுரத்துடன் வந்திருந்தார். இதில், தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேரவேண்டும். மக்கள் நல கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்த அங்கிருந்த தொண்டர்கள், அவரை அங்கிருந்து விரட்டி விட்டனர்.

சிறிது தூரம் சென்ற மணிராஜ், தன் பையில் வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். அப்போது, அங்கு ஒரு சில போலீசாரே இருந்தனர். அவர்கள் மணிராஜிடம் விசாரித்தனர்.

தீவிர ரசிகன்

அப்போது அவர் கூறியதாவது:-

கடையநல்லூரில் வார்டு உறுப்பினராக உள்ளேன். சிறு வயது முதலே விஜயகாந்தின் தீவிர ரசிகனாக இருந்து வருகிறேன். அவர் படம் வெளியாகும்போது போஸ்டர் அடித்து கொண்டாடுவேன். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த பின்னர், கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருகிறேன்.

என்னை பொருத்தவரை விஜயகாந்த் எதிலும் தோல்வி அடையக்கூடாது. இப்போது, ஜெயலலிதாதான் பிரதான எதிரி. எனவே, அவரை ஆட்சியில் இருந்து நீக்கவேண்டும். அவரை தோல்வி அடைய செய்யவேண்டும் என்றால், வலுவான கூட்டணியை விஜயகாந்த் அமைக்கவேண்டும். எனவே தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால்தான் வெற்றிப் பெற முடியும். ஜெயலலிதாவை தோற்கடிக்க முடியும்.

உயிரை விடவும் தயார்

காலம் கடந்து விடவில்லை. இப்போதுக்கூட மக்கள் நல கூட்டணியில் இருந்து வெளியேறி தி.மு.க.வுடன் விஜயகாந்த் இணையவேண்டும். இதை வலியுறுத்துவதற்காக கட்சி அலுவலகத்துக்கு வந்தேன். ஆனால், அங்குள்ளவர்கள் விரட்டியடிக்கின்றனர். அதனால் மனவெறுப்பில் விஷம் குடித்து விட்டேன். தி.மு.க.வுடன் விஜயகாந்த் கூட்டணி அமைக்கவேண்டும் என்பதற்காக நான் உயிரை விடவும் தயாராக உள்ளேன். நான் யாரிடமும் பணத்தை வாங்கிக் கொண்டு இப்படி பேசவில்லை. விஜயகாந்தின் உண்மை விசுவாசியாக இருந்து பேசுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அங்கு வந்த ஒரு ஆட்டோவில் மணிராஜை ஏற்றி, போலீஸ்காரர் ஒருவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.

அடித்தனர்

அப்போது திடீரென அங்கு வந்த ஒரு கும்பல், ஆட்டோவை வழிமறித்து, அதற்குள் இருந்த மணிராஜை வெளியில் இழுத்துப் போட்டு அடித்தனர். ஏற்கனவே விஷம் குடித்திருந்த மணிராஜ் மயங்கி விழுந்தார். அந்த கும்பலை அங்கிருந்த போலீசார் விரட்டி விட்டனர். பின்னர், அதே ஆட்டோவில் மணிராஜை ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.