Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 11, 2016

கேரளா கோவில் விழாவில் பயங்கரம் வாணவேடிக்கையின்போது வெடி விபத்து; 102 பக்தர்கள் பலி 350–க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதி


கொல்லம் அருகே கோவில் வாணவேடிக்கையின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 102 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 350–க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கேரளாவின் கருப்பு ஞாயிறு தினமாக மாறிய இந்த துயரச் சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
வாணவேடிக்கை
கேரள மாநிலம், கொல்லம் அருகே பரவூர் என்னும் இடத்தில் புட்டிங்கல் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களாக வருடாந்திர திருவிழா நடந்து வந்தது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு வந்தனர். வருடாந்திர திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் இரவு முதல் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி தொடங்கியது.
நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட வாணவேடிக்கையின்போது சக்தி வாய்ந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறி அருகில் இருந்த, கோவிலின் பொருட்கள் வைப்பு அறைகளுக்குள் விழுந்தன.
அங்கு ஏற்கனவே வாணவேடிக்கை நடத்துவதற்காக பட்டாசுகள் மற்றும் வெடி பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. வெடித்து சிதறிய தீப்பொறிகள் அந்த பட்டாசுகள் மீது விழுந்தது.
இடிந்து விழுந்தது
இதைத்தொடர்ந்து அந்த அறையில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள், வெடிபொருட்கள் காதுகள் செவிடாகும் அளவிற்கு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதனால் அந்த கட்டிடம் அடியோடு இடிந்து தரைமட்டமானது. இடி இடித்தது போன்ற இந்த வெடிச் சத்தம் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளவர்களுக்கும் தெளிவாக கேட்டது.
முதலில் இதை வாணவேடிக்கை என்று கருதிய பக்தர்கள், கோவிலின் அறைகள் இடிந்து விழுந்தபோதுதான் விபரீதத்தை புரிந்து கொண்டனர். உயிர் பிழைக்க அலறியடித்துக் கொண்ட நாலாபக்கமும் ஓடினர்.
இடுபாடுகளில் சிக்கி பலி
இருந்தபோதிலும், பட்டாசு அறையின் பக்கமாக இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் இதில் சிக்கிக் கொண்டனர். அந்த நேரத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால் இருளில் எந்தப்பக்கம் ஓடுவதென்றே பக்தர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் மீது கட்டிட இடுபாடுகள் மற்றும் கான்கிரீட் தூண்கள் விழுந்து அப்படியே அமுக்கின. இதனால் அவர்கள் மீள வழியின்றி இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி பலியாயினர்.
ஏராளமானோர் தூக்கி வீசப்பட்டும், உடல் சிதறியும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். பிணக்குவியல்களால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
பொருட்கள் வைப்பு அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து கோவில் வளாகத்தில் தீப்பிடித்துக் கொண்டது. மளமளவென்று பரவிய இந்த தீயை திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் ஆகிய நகரங்களில் இருந்து ஏராளமான தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் பலமணி நேரம் போராடி அணைத்தனர்.
பிரதமர் உத்தரவு
இந்த சம்பவம் பற்றி மாநில முதல்–மந்திரி உம்மன்சாண்டிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் தொடர்பு கொண்டு உதவும்படி கேட்டுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு சொந்தமான 4 ஹெலிகாப்டர்களை பயன்படுத்திக் கொள்ள பிரதமர் உத்தரவிட்டார். மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி.நட்டாவை உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிடுமாறு கேட்டுக் கொண்டார்.
போர்க்கப்பல்கள் விரைந்தன
நட்டாவுடன் டெல்லி சப்தர்ஜங் மற்றும் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை டாக்டர்கள் 15 பேர் கொண்ட குழுவினரும் கொல்லம் விரைந்தனர். இதேபோல் கொச்சி துறைமுகத்தில் இருந்து கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். கப்ரா, கல்பேனி ஆகிய 2 போர்க்கப்பல் மருந்து பொருட்களுடன் கொல்லம் நகருக்கு புறப்பட்டுச் சென்றன.
மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் நகரங்களில் இருந்து மீட்பு படையினரையும், ஆம்புலன்சுகளையும் வெடிவிபத்து நடந்த கோவிலுக்கு அனுப்பி வைக்க உம்மன்சாண்டி உத்தரவிட்டார்.
இதையடுத்து படுகாயம் அடைந்தவர்களில் 400–க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு திருவனந்தபுரம், கொல்லம் நகர அரசு ஆஸ்பத்திரிகளிலும், கொல்லம் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 13 பேர் ஏற்கனவே உயிர் இழந்துவிட்டதாக உடல்களை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.
வெடிவிபத்து நடந்த கோவிலில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. படுகாயம் அடைந்தவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
102 பேர் பலி
வெடிவிபத்து நடந்த கோவிலை முதல்–மந்திரி உம்மன்சாண்டி பார்வையிட்டார். பின்னர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது, அவர் கூறுகையில், ‘‘பட்டாசு விபத்தில் ஆண், பெண் பக்தர்கள் 102 பேர் உயிர் இழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்கள் விரும்பினால் காயம் அடைந்தவர்களை எந்த ஆஸ்பத்தியில் வேண்டும் என்றாலும் சேர்த்து சிகிச்சை அளிக்கலாம். இதற்கான செலவை அரசே ஏற்றுக் கொள்ளும். கோவிலில் வாணவேடிக்கை நிகழ்த்துவதற்கு கோவில் நிர்வாகம் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெறவில்லை’’ என்றார்.
முன்னதாக சம்பவ இடத்துக்கு மாநில உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதாலா விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார்.
அனுமதி இல்லை
மாவட்ட கலெக்டர் ஷினாமோல், பரவூர் புட்டிங்கல் அம்மன் கோவிலுக்கு சென்று மீட்பு பணிகளை நேரடியாக பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கோவில் நிர்வாகம் சார்பில் போட்டி போட்டு வாணவேடிக்கை நிகழ்த்த அனுமதி கேட்டனர். ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை’’ என்றார்.
இந்த வெடிவிபத்து குறித்து, கேரள போலீசார் கோவில் நிர்வாகிகள் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 307 (கொலை முயற்சி), மற்றும் 308 (கொலைக்கு உடந்தையாக இருத்தல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.