Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 6, 2016

வெளிநாட்டில் பணம் பதுக்கிய தகவல் அம்பலம் ஐஸ்லாந்து பிரதமர் ‘திடீர்’ ராஜினாமா செய்தார்


வெளிநாட்டில் பணம் பதுக்கிய தகவல் அம்பலமானதை தொடர்ந்து, ஐஸ்லாந்து பிரதமர் பதவி விலகினார்.

பணம் பதுக்கல்

கருப்பு பணத்தை பதுக்க ஏற்ற நாடாக சுவிட்சர்லாந்து கருதப்பட்டு வரும் நிலையில், வேறு சில வெளிநாடுகளும் அந்த பட்டியலில் இணைந்துள்ளன. மத்திய அமெரிக்க நாடான பனாமாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘மொசாக் பொன்செகா’ என்ற சட்ட நிறுவனம், இந்த மோசடிக்கு துணை புரிந்துள்ளது.

வெளிநாடுகளில் போலியான பெயரில் நிறுவனங்களை தொடங்கி, அதன் பெயரில் வங்கிகளில் பணத்தையும், சொத்துகளையும் பதுக்கி வைப்பதற்கு உடந்தையாக இருந்துள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, 12 நாடுகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என நூற்றுக்கணக்கானோர், பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக பட்டியல் வெளியானது.

ஐஸ்லாந்து பிரதமர்

‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரிலான அந்த பட்டியலில், ஐஸ்லாந்து நாட்டு பிரதமர் சிக்முன்டுர் டேவிட் குன்லாக்சன் பெயரும் உள்ளது. அவரும், அவருடைய மனைவியும் பிரிட்டிஷ் விர்ஜின் தீவில் ஒரு நிறுவனத்தை தொடங்கி, அங்கு பல மில்லியன் டாலர் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஐஸ்லாந்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. பிரதமர் பதவி விலகக்கோரி, போராட்டங்கள் வெடித்தன. அவரது அரசுக்கு ஆதரவு அளித்து வரும் சுதந்திர கட்சி, ஆதரவை விலக்கிக் கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தது.

இதை எதிர்பார்க்காத பிரதமர் குன்லாக்சன், பாராளுமன்றத்தை கலைத்து விட்டு, மறுதேர்தலுக்கு வழிவகுப்பேன் என்று எச்சரித்தார். ஆனால், கூட்டணிக்கட்சி பணியவில்லை.

இதையடுத்து, பாராளுமன்றத்தை கலைக்குமாறு அதிபர் ஒலாபுர் ரக்னர் கிரிம்சனை பிரதமர் கேட்டுக்கொண்டார். ஆனால், அவரது யோசனையை அதிபர் ஏற்கவில்லை.

ராஜினாமா

இந்த சூழ்நிலையில், பிரதமர் குன்லாக்சன் நேற்று இரவு தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை தனது கட்சியின் எம்.பி.க்கள் கூட்டத்தில் அவர் அறிவித்தார். இத்தகவலை அவரது கட்சியின் துணைத்தலைவர் ஜோகன்சன், டெலிவிஷன் பேட்டியில் தெரிவித்தார்.

‘பனாமா பேப்பர்ஸ்’ விவகாரத்தில், முதலில் பதவியை பறிகொடுப்பவர் ஐஸ்லாந்து பிரதமரே ஆவார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.