Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 26, 2016

சென்னை எழும்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ.5 கோடி சிக்கியதா? அதிகாரிகள் அதிரடி சோதனை


சென்னை எழும்பூரில் உள்ள அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.4 கோடியே 80 லட்சம் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிரடி சோதனை

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்களை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. நகரின் முக்கிய இடங்களிலும், இரவு நேரங்களிலும் பறக்கும் படைகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தில் கொண்டு செல்லப்படும் பரிசுப் பொருட்கள், ரொக்கப்பணம் முதலியவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள 16 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் வீட்டில் கோடிக்கணக்கான பணம் குவித்து வைக்கப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. இதனை தொடர்ந்து நேற்று மாலை 4.30 மணி அளவில் வருமான வரித்துறை உதவி ஆணையாளர் சஞ்சய்காந்தி தலைமையிலான அதிகாரி குழுவினரும், எழும்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சங்கீதா தலைமையிலான தேர்தல் அதிகாரி குழுவினரும் சென்று அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்

வீட்டில் இருந்த சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியானது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிலும் மக்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது.

அதிகாரிகள் சோதனை நடத்தியது விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான வீடாகும். இவர் தஞ்சை மாவட்டம் எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக இருந்து வருகிறார். தற்போது இந்த வீட்டில் அவரது மகன்கள் விஜய் கிருஷ்ணசாமி, ஆனந்தகிருஷ்ணன் இருவர் மட்டுமே இருந்து வருகின்றனர். அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து விஜயகுமார் உடனடியாக தனது வீட்டிற்கு வந்தார். அவரிடமும், அவரது இரு மகன்களிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வீட்டை சோதனையிட்டதில், ரூ.4 கோடியே 80 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த பணத்தை வைத்ததற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லையென்றும் தெரியவந்தது.

ரூ.4 கோடியே 80 லட்சம் சிக்கியதா?

மேலும், திரு.வி.க.நகரில் உள்ள ஒரு வீட்டில், விஜயகுமார் கணக்கில் வராத பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார் என்றும் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து வருமான வரித்துறையினர் விஜயகுமார் மற்றும் அவரது மகன் விஜய் கிருஷ்ணசாமியை காரில் ஏற்றிக்கொண்டு திரு.வி.க.நகர் புறப்பட்டனர்.

இதற்கிடையில் விஜயகுமாரின் 2-வது மகன் ஆனந்தகிருஷ்ணனிடம் தேர்தல் அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இரவு 9 மணியை கடந்தும் இந்த விசாரணை நீடித்தது.

அந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் ரூ.4 கோடியே 80 லட்சம் சிக்கியதாகவும், முறையான ஆவணம் இல்லாததால் அந்த பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இரவு வரை இது தொடர்பான எந்த தகவல்களையும் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.

பரபரப்பு

திரு.வி.க.நகரில் ஒரு ரகசிய இடத்தில் விஜயகுமார் மற்றும் விஜய் கிருஷ்ணசாமியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கரூரில் கோடிக்கணக்கில் கணக்கில் காட்டாத ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் எழும்பூரில் அதிகாரிகள் நடத்திய இந்த திடீர் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜேஷ் லக்கானி அறிக்கை

இதற்கிடையில் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ‘வாட்ஸ் அப்’ வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-

எழும்பூரில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் சோதனை நடந்தது உண்மை தான். இந்த சோதனையில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளும் ஈடுபட்டனர். நடந்த சோதனை முழுக்க முழுக்க வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட பணம் குறித்து முழு விவரமும் விரைவில் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.