Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 25, 2016

நண்பரை போலீசில் சிக்க வைத்தவரை பழி தீர்க்க ஆயுதங்களுடன் ராமநாதபுரம் வந்த 7 பேர் கைது


நாகர்கோவிலில் நண்பரை போலீசில் சிக்க வைத்தவரை பழி தீர்க்க பயங்கர ஆயுதங்களுடன் ராமநாதபுரத்திற்கு வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரகசியதகவல்
ராமநாதபுரம் பழைய பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் பகுதியில் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் வாகனங்களில் சுற்றி வருவதாக போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின்பேரில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ராமநாதபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சர்வேஸ்ராஜ் தலைமையில் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்–இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ் உள்பட போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த தேடுதலில் பழைய பஸ் நிலைய பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றிக்கொண்டிருந்த 7 பேரை பிடித்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் பிடிபட்ட நபர்கள் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த உதயகுமார் மகன் மகேஷ்குமார் (வயது 24), நெல்லை தச்சநல்லூர் முத்துமாரியம்மன்கோவில் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜா(24), நெல்லை நாங்குநேரி கருக்காட்டி கிராமத்தை சேர்ந்த சிவன் மகன் பரமசிவன்(24), நாகர்கோவில் வடசேரி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த அண்ணாதுரை மகன் மதன்பாபு(வயது 23), கன்னியாகுமரி குமாரபுரம் தோப்பு வெங்கடேஸ்வரன் நகரை சேர்ந்த கண்ணன் மகன் அனில்ஸ்(24), ஈரோடு பெருந்துறை துடுப்பதி கிராமம் கன்னியப்பன் மகன் கருணாகரன்(27), கன்னியன் மகன் பூபாலன்(27) ஆகியோர் என்பது தெரியவந்தது.

தொழில் போட்டி
சோதனையிட்டபோது அவர்களிடம் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 7 பேரையும் போலீசார் அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள், ஆட்டோ போன்றவற்றை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 7 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிடிபட்ட 7 பேரும் பழி தீர்க்க ராமநாதபுரத்திற்கு ஆயுதங்களுடன் வந்தது தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் நகரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் ராஜசேகரன் என்பவர் ஏற்கனவே நாகர்கோவில் பகுதியில் தங்கியிருந்து நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். அப்போது அவருக்கு அதேபகுதியை சேர்ந்த சுபின் என்பவருக்கும் தொழில்போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த தகராறில் ராஜசேகரன் அளித்த புகாரில் போலீசார் வழக்குபதிவு செய்து சுபினை போலீசார் கைது செய்தார்களாம்.

சிறையில் அடைப்பு
இதுதவிர குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் சுபினை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக ராஜசேகரன் மீது சுபினின் நண்பரான மதன்பாபு ஆத்திரத்தில் இருந்தாராம். நண்பனை போலீசில் சிக்க வைத்த ராஜசேகரனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு தனது கூட்டாளிகளோடு சேர்ந்து ஆயுதங்களுடன் ராமநாதபுரத்திற்கு வந்தது தெரியவந்தது. இங்கு ராஜசேகரனின் நடவடிக்கைகளை நோட்டமிட்டு காத்திருந்த அவர்கள் தங்களது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன் போலீசார் அவர்களை பிடித்து கைது செய்துள்ளனர். நண்பருக்காக பழி தீர்க்க வந்த கும்பலை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுத்ததால் கொலை சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.