Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 6, 2016

அனைத்து வகை மதுவுக்கும் உடனடி தடை பீகாரில் முழுமையான மதுவிலக்கு அமல் முதல்–மந்திரி நிதிஷ்குமார் திடீர் அறிவிப்பு


பீகாரில் முழுமையான மதுவிலக்கு உடனடியாக அமல்படுத்தப்படுவதாக முதல்–மந்திரி நிதிஷ்குமார் அறிவித்தார். அங்கு அனைத்து வகை மதுவுக்கும் தடை விதிக்கப்பட்டது.

தேர்தல் வாக்குறுதி
கடந்த நவம்பர் மாதம் பீகார் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. தேர்தல் பிரசாரத்தின்போது ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று ஐக்கிய ஜனதா தள தலைவர்களில் ஒருவரான நிதிஷ்குமார் வாக்குறுதி அளித்தார்.

தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அவருடைய கூட்டணி வெற்றி பெற்று முதல்–மந்திரியாக பதவியேற்றதும் பீகாரில் 2016–ம் ஆண்டு ஏப்ரல் 1–ந் தேதி முதல் மதுவிலக்கு அமலுக்கு வரும் என்று நிதிஷ்குமார் அறிவித்தார்.

சர்ச்சை
அதன்படி கடந்த 1–ந்தேதி பீகாரில் மதுவிலக்கு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. எனினும் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களை பெரிய மற்றும் சிறிய நகரங்களில் விற்பதற்கான அனுமதி மட்டும் நீடித்தது. கள் விற்பனையும் நீடித்தது. இதனால், இப்பிரச்சினையில் சர்ச்சை எழுந்தது.

இந்த வகை மதுபானங்களின் விற்பனையையும் தடை செய்யவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் தரப்பில் மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நிதிஷ்குமார் தலைமையில் நேற்று மந்திரி சபை கூட்டம் பாட்னா நகரில் நடந்தது. கூட்டத்துக்கு பின்பு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:–

முழுமையாக அமல்
இன்று(நேற்று) முதல் பீகாரில் மதுவிலக்கு முழுமையாக அமலுக்கு வருகிறது. இனி மாநிலம் முழுவதும் பீகார் மாநில மதுபான கழகத்தின் சார்பில் நடத்தப்படும் அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும். இதேபோல் ஓட்டல்கள், பார்களிலும் மதுபான விற்பனை தடை செய்யப்படுகின்றன.

பீகார் மாநிலத்தில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் இனி மற்ற மாநிலங்களுக்கு விற்பனை மட்டுமே செய்யப்படும். அவற்றை பீகாரில் விற்பனை செய்யக்கூடாது. வெளிநாட்டு மதுபானங்களை தயாரிக்கும் கம்பெனிகள் அவற்றை தொடர்ந்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

கள்ளுக்கும் தடை
இதேபோல் கள் விற்பனையும் தடை செய்யப்படுகிறது. ஆனால், பதனீர் விற்க எந்த தடையும் இல்லை. கள் இறக்கி விற்பனை செய்து வந்தோர் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு நிதி உதவி செய்யப்படும். பதனீர் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.

மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதற்கு கடந்த 4 நாட்களில் குறிப்பாக பெண்கள், முதியோர், சிறுவர், சிறுமிகள் என அனைத்து தரப்பினரிடமும் அமோகமாக வரவேற்பு கிடைத்தது. இதனால்தான் நகர்ப்புறங்களிலும் மதுபானங்களை விற்பனை செய்வதையும், மது அருந்துவதையும் தடை செய்யும் முடிவுக்கு வந்தோம்.

இனி பீகாரில் எந்த மதுபானத்துக்கும் இடமில்லை. முழுமையான மதுவிலக்கை நடைமுறைக்கு கொண்டு வந்திருப்பதால் மதுப்பழக்கம் காரணமாக குடும்பங்களில் நடந்து வந்த சண்டை சச்சரவுகள், பிரச்சினைகள் இனி வெகுவாக குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அழிக்கப்படும்
அப்போது, நிருபர்கள் பீகார் மாநில மதுபான கழகம் மதுக் கடைகளுக்கு வினியோகம் செய்த 36 ஆயிரம் லிட்டர் மது என்னவாகும்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நிதிஷ்குமார், ‘‘இந்த மதுபானங்களை (பீகாரில் தயாரான வெளிநாட்டு மதுபான வகைகள்) அகற்றுவது குறித்து கலால்துறை முடிவு செய்யும். இவற்றை சேமித்து வைப்பது நல்லதல்ல என்பதால் அந்த மதுபானங்கள் அழிக்கப்படும்’’ என்று குறிப்பிட்டார்.

மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தி இருப்பதன் மூலம் பீகார் மாநிலம் குஜராத், கேரளா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் வரிசையில் 4–வதாக இணைந்து இருக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.