Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 28, 2016

85 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூருவில் ஏப்ரல் மாதத்தில் 102.5 டிகிரி வெயில் வானிலை ஆய்வு மைய அதிகாரி தகவல்


பெங்களூருவில், 85 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் 102.5 டிகிரி வெயில் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியுள்ளார்.

102.5 டிகிரி வெயில்

கர்நாடகத்தில் கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் கோடைவெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் வழக்கமான கோடைக்காலத்தை விட அதிகளவு வெயில் பதிவாகி வருகிறது. இதனால், கோடைவெயிலின் கொடுமையில் சிக்கி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கோடை வெயிலுக்கு ‘பூங்கா நகரம்‘ என அழைக்கப்படும் பெங்களூருவும் தப்பவில்லை.

பெங்களூருவிலும் தினந்தோறும் ஏறக்குறைய 100 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. கடந்த 1931-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி பெங்களூருவில் அதிகபட்சமாக 38.3 செல்சியஸ் வெயில் பதிவாகி இருந்தது. இந்த நிலையில், 85 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஏப்ரல் மாதத்தில் பெங்களூருவில் அதிகபட்சமாக 39.2 செல்சியஸ் (102.5 டிகிரி) வெயில் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறினார்.

டெல்லியை விட அதிகம்

பெங்களூருவில் வெளுத்து வாங்கும் வெயில் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் (பொறுப்பு) கீதா அக்னி கோத்ரி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

1867-ம் ஆண்டு முதல் வெயிலின் அளவு அளவிடப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவில் ஏப்ரல் மாதத்தில் 37 செல்சியஸ் வெப்பம் பதிவாகி வந்தது. இந்த ஆண்டு டெல்லியை விட பெங்களூருவில் அதிகளவில் வெப்பம் பதிவாகி உள்ளது. கடந்த 4 நாட்களாக பெங்களூருவில் 38 செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. கடந்த 1931-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி பெங்களூருவில் அதிகபட்சமாக 38.9 செல்சியஸ் வெயில் பதிவானது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு வெயிலின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

123 ஆண்டுகளுக்கு பிறகு

இந்த நிலையில், நேற்று மைசூருவில் 39.9 செல்சியஸ் வெயில் (104 டிகிரி) பதிவானது. 123 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் மைசூருவில் பதிவான அதிகபட்ச வெயிலின் அளவு இதுவாகும். மேலும், மண்டியாவில் நேற்று 39.6 செல்சியஸ் வெயில் பதிவானது. இது 43 ஆண்டுகளுக்கு பின் மண்டியாவில் பதிவான அதிகபட்ச வெயிலின் அளவாகும்.

சித்ரதுர்காவில் நேற்று 40.4 செல்சியஸ் வெயில் பதிவானது. இதுவும் கடந்த 123 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரதுர்காவில் பதிவான அதிகபட்ச வெயிலின் அளவாகும்.

காலையில் வெயில்... மாலையில் மழை..!

பெங்களூருவில், நேற்று 39.2 செல்சியஸ் வெயில் பதிவானதால் மதிய வேளையில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், நேற்று மாலையில் சூறை காற்று வீசியது. இந்த காற்றில், புழுதி பறந்தன. இதனால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் பலத்த காற்றுடன் திடீரென கனமழை பெய்தது. இந்த மழை, பெங்களூருவில் விதானசவுதா, மல்லேசுவரம், ராஜாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்தது. சிறிது நேர இடைவெளிக்கு பிறகு இரவு 7 மணி அளவிலும் நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை, கோடை வெயிலில் சிக்கி தவித்த பெங்களூரு மக்களுக்கு குளிர்ச்சியை அளித்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.