Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 27, 2016

பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட தலித் சமுதாயம் - 2



ஒரு குறிப்பிட்ட விவசாய நிலத்துடன் இணைந்திருந்தாலும் பறையர்களுக்கு விவசாயக் கூலி உரிமை இருந்தது. அந்தப் பாரம்பரியக் கூலி உரிமை மகசூலில் பத்து சதவிகிதம் வரை இருந்தது. அதே காலகட்டத்தில் உலகின் வேறெந்தப் பகுதியின் –பிரிட்டிஷ் உட்பட்ட – விவசாயக் கூலிகளின் கூலியைவிட இது உயர்ந்தது. அரசாங்க வரிவசூல் நியதிகளை இந்தப் பாரம்பரியமுறை கண்டுகொள்ளவில்லை என்பதை கலெக்டரின் ரிப்போர்ட் தெரிவிக்கிறது.
பறையர்கள் வேலை நிறுத்தம் செய்தது மிகத் தெளிவாக தங்கள் கூலி உயர்வை முன்வைத்தே.. பிரிட்டிஷார் கூறுவது போல எஜமான விசுவாசத்தை முன்வைத்து அல்ல.
பறையர்களுக்கும் இதர பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்களுக்கும் மிகக் கடுமையான தண்டனை அளிக்கப்பட்டது. தீவாந்திர சிட்சை எனப்படும் இந்தத் தண்டனை – சுமத்ரா தீவில் உள்ள பிரிட்டிஷ் தொழிற்சாலை ஒன்றில் அடிமைகளாக வாழ்க்கை முழுவதும் அடிமையாக மடிவது.
இந்தக் கொடூரமான தண்டனைக்கு ஆளான தலித் சமுதாயத்தினரையும் இதர சமுதாயத்தினரையும் குறித்த நினைவுகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன.

விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் உபரியை அதிகரிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பிரிட்டிஷார் முனைந்தனர். எனவே பிரிட்டிஷ் ராணுவத்திலிருந்த பறையர் சமுதாயத்தினர் முழுமையாக வெளியேற்றப்பட்டனர். 1777 இல் பிரிட்டிஷார் செய்த மற்றொரு விஷயமும் பின்னாள்களில் பஞ்சத்தின்போது தலித்துகளின் இன்னல்களுக்கான முக்கியக் காரணியாகியிருந்தது.

தங்கள் வெடிமருந்து கிடங்கிக்கு  எடுத்துகொண்ட நிலத்துக்கான நஷ்டஈடாக, மெட்ராஸில் தலித்துகள் வாழும் ’பறையர் சேரி’ என அழைக்கப்பட்ட பகுதியில் இருந்து நிலத்தை அபகரித்து வழங்கினர். இதற்கு எதிராகப் பறையர் சமுதாயத் தலைவர்கள் குரல் எழுப்பினர். இது தாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் இடம், கணக்கற்ற ஆண்டுகளாகத் தங்களுக்கு பாத்யதைப்பட்டது என்றார்கள். ஆனால் பிரிட்டிஷார் அதை மறுத்துவிட்டனர். இந்த நிலத்தில் தலித்துகளுக்கு எந்த பாத்யதையும் கிடையாது, அவர்கள் அங்கு வாடகைக்கு இருப்பவர்களாகத்தான் கருதப்பட முடியும், இந்த இடத்தில் இப்போது இருக்கும் குடிசைகளே அவர்களுக்குப் போதுமானது, அவர்கள் மேலதிக குடிசைகளையும் அங்கே கட்டக் கூடாது என்றனர்..

பிரிட்டிஷ் சமுதாயத்தில் இருந்த நிலமற்ற விவசாயத் தொழிலாளிகளின் அடிமைநிலையை ஒத்த இடத்துக்கு தென்னிந்திய தலித் சமுதாயம் தள்ளப்பட்டது இந்தக் காலகட்டத்தில்தான். பறையர் எனும் வார்த்தை மிக மோசமான இழிவான பெயர் கொண்டதாக மாற்றப்பட்டதும் இதே காலகட்டத்திலாகவே இருக்க வேண்டும். இந்திய சமுதாயத்தின் இயற்கை பரிணாமம் தேக்கநிலைக்கு உள்ளாக்கப்பட்டு, இந்திய சமூக அமைப்பின் உள்-உறவுகள் பிரிட்டிஷ் சமுதாயத்தின் படிநிலைகளைப் பிரதியெடுக்க வைக்கப்பட்டது. 1840 இல் வெளியான விவிலிய இலக்கியக் கலைக்களஞ்சியம் இதைத் தெளிவுப்படுத்துகிறது:

ஆதியாகமத்தில் (3.19) ஆதி சாபத்தின் ஒரு பகுதியாக நீ உன் முகத்தின் வியர்வையால் உன் உணவை உற்பத்தி செய்வாய் எனும் ஆணை அளிக்கப்பட்டது. எனவே உடல் உழைப்பு என்பது ஒரு கடுங்கனமான பாரம் எனும் பார்வை இருக்கிறது… இந்த மனப்பதிவுகள்… பெரிய அளவில் மனிதனுக்குத் தீமையை இழைத்துவிட்டன. எனவே நம் கிறிஸ்தவ தேசங்களிலும் பெரும்பாலான உழைக்கும் மக்கள் பறையர் சாதியாக பரம்பரை பரம்பரையாக நீரிறைக்கும் மரம்  செய்ய வேண்டியவர்களாக நடத்தப்படும் நிலை இருக்கிறது. அது இறை விருப்பமெனவும், இந்த மக்கள் உயர்ந்த சிந்தனைகளை சிந்திக்க  இயலாதவர்களென்றும், இவர்கள் மேலெழுந்தால் சமுதாயத்தைக் களங்கப்படுத்திவிடுவார்களென்றும், எனவே இவர்களை வெறுப்புடனும் சுமைகளாலும் கட்டுப்படுத்தி வைப்பது சமுதாயத்தின் பாதுகாப்புக்கு அவசியமென்றும் கருதப்படுகிறது.

இந்த வரிகளை எழுதியவர் அறிந்திடாத விஷயமென்னவென்றால் உண்மையில் பறையர் சமுதாய மக்களைப் போல ஐரோப்பிய கிறிஸ்தவத் தேச உழைக்கும் மக்கள் நடத்தப்படவில்லை. மாறாக 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய கிறிஸ்தவத் தேச உழைக்கும் சமுதாய மக்களின் சுதந்திரமற்ற நிலை இங்குள்ள தலித் சமுதாயங்கள் மீது திணிக்கப்பட்டது. அதற்கு ஒட்டுமொத்த சமுதாய எதிர்ப்பும் இருந்தது. ஏனெனில் தலித் சமுதாயத்தின் வீழ்ச்சி என்பது தென்னிந்திய விவசாய அமைப்பின் பெரும் வீழ்ச்சியின் ஒரு அங்கமாக அமைந்திருந்தது. அந்த அமைப்பின்  ஜனநாயகத்தன்மை கொண்ட  சாத்தியங்கள் அழியவும், அந்த அமைப்பின் தேக்கநிலையால் அதில் இயல்பாக இருந்த சுரண்டலும் படிநிலைத்தன்மையும் தீண்டாமையும் அதிகரிக்கவுமான வழியை அது உருவாக்கியது.

இவற்றில் வெளிப்படும் ஒரு முக்கிய உண்மை என்னவென்றால் பிரிட்டிஷ் சுரண்டலுக்கு முன்னால் நிலவிய ’நிலவுடைமை சமுதாய’ அமைப்பு நமக்கு கற்பிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிக ஜனநாயக சாத்தியங்களைக் கொண்ட அமைப்பாக விளங்கியுள்ளது. அதுவும் ஏற்றத்தாழ்வுகளும் சுரண்டலும் கொண்ட அமைப்பாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் பிரிட்டிஷ் சுரண்டலுக்கு எதிராக அந்த அமைப்பு ஒருங்கிணைந்து ஒரு ஜனநாயக முறை எதிர்ப்பை காட்டியிருக்கிறது. அந்த எதிர்ப்பு மிகத் திறமையுடனும் இரக்கமின்றியும் பிரிட்டிஷாரால் ஒடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள்கூட இன்று இல்லை. பெரியதம்பி என்கிற பறையர் தலைவரின் வார்த்தைகள் மட்டுமே அதற்கான ஒரு சிறிய திறப்பை அளிக்கின்றன.

18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷார் இந்தியாவில் ஏற்படுத்திய சுரண்டல் முறை ஈடு இணையற்றது. 1757 பிளாசி போர் முதல் 1815 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 2.5 முதல் 5 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய செல்வம் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு எடுத்து செல்லப்பட்டதாக கணக்கிடப்படுகிறது

19 ஆம் நூற்றாண்டின் மத்தியக் காலங்களில் தொடங்கி இன்றுவரைக்கும் உருவாக்கப்பட்டுவரும் ’ஒடுக்கப்பட்ட தலித்துகள்-சுரண்டும் பிரிட்டிஷார்கள்-அவர்களுடன் கூட்டு சேர்ந்து ரத்தம் உறிஞ்சும் மேல்சாதியினர்- மனசாட்சியுடனும் ‘அருட்பணி’ (மதமாற்றம்) செய்து விடுதலைக் குரல் எழுப்பும் மிஷினரிகள்’ எனும் சித்திரத்துக்கு வேறுபட்டது இது. தங்கள் உரிமைகளுக்காக முதல் கலகக் குரல் எழுப்பிய தலித்துகள் – அவர்களுடன் இணைந்த மிராசுதார்கள் பாளையக்காரர்கள் – இவர்களுக்கு எதிராக இவர்களை சட்ட ஒழுங்குக்கு எதிரானவர்கள் என ஈவிரக்கமின்றி அடக்கி முடிந்தவரை செல்வத்தை சுரண்டி எடுக்கும் பிரிட்டிஷ் அரசு இயந்திரம் – அந்தப் பொருளாதார உபரியின்மீது அமர்ந்தபடி கறுப்புத் தோல் விக்கிரக வழிபாட்டாளர்களுக்கு காருண்யத்தின் உபரித்துளிகளை அவ்வப்போது அளித்த ஐரோப்பிய மிஷினரிகள் – இந்தச் சித்திரமே வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட பக்கங்களிலிருந்து எழுகிறது.

சித்ரவதைகளுக்கு எதிரான முதல் குரல்



19 ஆம் நூற்றாண்டிலும் விவசாயிகளுக்கு எதிரான சித்ரவதைகள் தொடர்ந்தன. இதனை எதிர்த்து முதல் ஜனநாயகக் குரலை எழுப்பியவர் காசலு லட்சுமிநரசு செட்டி. பிரிட்டிஷாருடன் இணைந்து இந்திய ரத்தத்தை உறிஞ்சிய மேல்சாதி எனும் மனச்சித்திரத்துக்குப் பொருத்தமானவர் நரசு செட்டி. ஆனால் அத்தகைய குற்றச்சாட்டுக்கு ஏற்றவிதமான இடத்தில் இருந்தாலும் அவரது செயல்பாடுகள் அதற்கு நேர் எதிராக இருந்தன. தனது தொழில் வர்த்தகத்தை அவர் கவனிக்கவில்லை. மாறாக சிறு விவசாயிகளையும் விவசாயக் கூலிகளையும் பிரிட்டிஷ் சித்ரவதை மூலம் சுரண்டுவதைத் தொடர்ந்து கண்டித்து வந்தார். கிழக்கிந்திய கம்பெனிக்கு மேலே பிரிட்டனில் மக்கள் சபை அமைப்பு இருப்பதை அவர் அறிந்தார். தொடர்ந்து பிரிட்டனின் மக்களவைக்கு கடிதங்கள் எழுதி இந்தியாவின் விவசாய சூழலையும் இங்கு கிழக்கிந்திய கம்பெனி மூலம் செய்யப்படும் சுரண்டல்களையும் சித்ரவதைகளையும் விவரித்தார். மிஷினரிகளின் மதமாற்ற சூழ்ச்சிகள், பிரிட்டிஷாரின் சித்ரவதை சுரண்டல்கள் ஆகிய இரண்டையும் ஒருசேர எதிர்க்க சென்னையில் ஓர் ஆங்கில இதழையும் ஆரம்பித்தார். அதன் பெயர் கிரஸெண்ட் (‘Crescent’). இதன் விளைவாக பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினரான டான்பி செய்முர் (Danby Seymour) என்பவர் தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு அது மெட்ராஸில் வரி வசூல் செய்ய விவசாயிகளிடம் செய்யப்படும் சித்ரவதைகளை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டது.

இறுதியாக இந்த கமிஷன் ரிப்போர்ட் வந்த போது அது பிரிட்டிஷ் ஆதரவுத்தன்மை கொண்டிருந்தது என்றாலும், மெட்ராஸ் பகுதியில் சித்ரவதை என்பது பெரிய அளவில் நடக்கிறது என்பது பிரிட்டனின் மனசாட்சியை ஓரளவாவது சீண்டியிருந்தது. அதீதமான வரிவசூல் நிர்ப்பந்தம், கம்பெனி ஆட்சியில் காவல்துறைக்குக் கொடுக்கப்பட்ட கட்டற்ற அதிகாரம் ஆகியவை குறித்து கமிஷன் மௌனிப்பதை நிகோலஸ் டிர்க்ஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.

பொதுவாக கமிஷனின் போக்கு இந்தியர்கள் மீது பழியை போடுவதாக இருந்தது. ஐரோப்பிய அதிகாரிகளுக்கும் சித்ரவதைக்கும் தொடர்பில்லை என்பது போலக் காட்டும் போக்குக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆதாரங்களை அடுக்கினார் ஜியார்ஜ் தாமஸ் கேப்பல் (George Thomas Keppel) என்கிற உறுப்பினர்.[12] பல கலெக்டர்கள், பிரிட்டிஷ் வர்த்தகர்கள் சித்ரவதை இல்லாவிட்டால் தாசில்தார்களால் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு வேண்டிய வரி வசூலிக்க முடியாது என சித்ரவதையை நியாயப்படுத்தியிருந்தனர். இங்கு வட ஆர்க்காடு கலெக்டரான பவுர்டில்லான் (J.D.Bourdillon) செய்துள்ள அவதானிப்பு முக்கியமானதாகும். பிரிட்டிஷாரின் நிலம் சார்ந்த வரி வசூல் முறை சொத்தின் மதிப்பை கடுமையாகக் கீழிறக்கிவிட்டது, இது பொதுவாகவே மக்களின் சுயமரியாதையையும் நடத்தையையும் பாதித்தது என்பதை அவர் பதிவு செய்கிறார். அப்படி ஒரு சூழலில் இத்தகைய கொடூரமான அவமானப்படுத்தும் சித்ரவதைகளுக்கு அவர்கள் தங்களை ஆளாக்க அனுமதித்திருக்க மாட்டார்கள்.

இந்த செயல்பாடுகளுக்கான விளைவுகளை நரசு செட்டி அனுபவிக்க வேண்டியதாயிற்று. அரசாங்கம் அவரது பத்திரிகையை முடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. அவரது வர்த்தகமும் தகர்ந்தது. 1863 இல் அவர் இறந்தார். அத்துடன் அவர் நடத்திய பத்திரிகையும் மூடப்பட்டது. இன்றைய அரசியல் பார்வையில் லட்சுமிநரசு செட்டி ஒரு இந்துத்துவராகவே அறியப்படுவார். அவர் மதமாற்றத்தை கடுமையாக எதிர்த்தார். ஆனால் ஒடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்காக அன்றைய தாசில்தார்கள்-பிரிட்டிஷ் அதிகாரிகள் என்கிற அசுர பலம் பொருந்திய கூட்டணிக்கு எதிராக தனி மனிதராக குரல் கொடுக்கும் ஆன்மபலம் அவருக்கு இருந்தது. அதை அவரது இந்து மதம் அளித்தது. அக்குரல் ஒரு நிறுவனக் குரலாக மாறியிருந்தால் தாதுவருட பஞ்சம் சென்னை மாகாணத்தில் பெரிய அளவில் தடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால் அப்படி ஒரு நிறுவனம் மக்கள் உரிமைக்காக இந்தியாவில் உருவாகியிருக்க வேண்டுமென்றால் அதற்கு நிதி அவசியம். இந்தியாவில் தொடர்ந்து கலகக் குரல்கள் ஜனநாயக சக்தியுடன் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை நோக்கி உயர்ந்த அதே காலகட்டத்தில் இந்தியா மிகப் பெரிய வளச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டது. அதே காலகட்டத்தில்தான் பிரிட்டனின் அளப்பரிய உபரியின் மீது மிஷினரி அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இன்று அவை அளிக்கும் சித்திரங்கள் மூலமாகவே நாம் பஞ்சத்தையும், அந்த மிஷினரி அமைப்புகளின் வாரிசுகள் அளிக்கும் கருத்தியல் மூலமாகவே நம் வரலாற்றுணர்வையும் பெறும் சாபத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம்.

ஒடுக்கப்பட்ட சுதேச நிவாரணங்கள்

அதீத சுரண்டல், உணவு தானியங்கள் பிரிட்டிஷாரின் போர்களுக்காக ஏற்றுமதி செய்யப்படுதல், இந்திய சமுதாயத்தில் குறிப்பாக பாரம்பரிய விவசாய அமைப்பு பரிணமிக்காமல் அடைந்த தேக்கநிலை இத்தனைக்கும் மேலாக கட்டற்ற சந்தை பொருளாதாரத்தின் கண்ணுக்குத் தெரியாத கரத்தின் மீது பிரிட்டிஷ் அரசுக்கு ஏற்பட்ட திடீர் பக்தி – இவை அனைத்துமே பஞ்சத்துக்கான அடித்தளத்தை உருவாக்கியிருந்தன. இது போதாதென்று 1876-77 இல் பிரிட்டனில் விவசாய உற்பத்தி மோசமாக இருந்தது. எனவே பிரிட்டிஷ் உணவுதானிய சந்தையின் ஸ்திரத்தன்மைக்காக 3.2 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானியங்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. 1876 இல் பஞ்சத்தின் முதல் அதிர்வுகள் சென்னையை எட்டத் தொடங்கியதுமே பாரம்பரிய அன்னதானங்கள் சென்னையில் செய்யப்பட்டன. தொடக்க பஞ்ச நிவாரண பணிகளில் ஒரு நாளைக்கு 10,000க்கும் மேற்பட்டோருக்கு உணவு அளிக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கம் இதைப் பாராட்டியது. கூடவே உடல்நிலை நன்றாக இல்லாத உழைக்க முடியாதவர்களுக்கு மட்டுமே இந்த நிவாரண உதவி அளிக்கப்பட வேண்டுமென்று எச்சரித்தது. விரைவில் இந்த பஞ்ச நிவாரண சேவைகளை பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி ஏற்றெடுத்தார். இச்சமயம் அது நாளைக்கு 22,000 என உயர்ந்திருந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.