மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் 42 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் தண்ணீர் எடுக்க சென்ற யோகிதா தேசாய் என்ற 12 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விவசாய பூமியான மரத்வாடா மண்டலத்தை சேர்ந்த மாவட்டங்கள் இன்று வறண்டுபோய் பாலைவனம் போல காட்சியளிக்கின்றன. மழையை நம்பி கடன் வாங்கி பயிர்செய்த விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் பறிபோன சோகத்தில் வாழ்க்கையையே முடித்துக்கொள்கின்றனர். தினந்தோறும் ஆங்காங்கே விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சோகக்கதையை தான் கேட்க முடிகிறது. இந்த நிலையில் மரத்வாடா மண்டலத்தில் உள்ள நீர்தேக்கங்கள் வறண்டு போய் காட்சி அளிக்கின்றன.
இதனால் குடிக்கக்கூட தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. தண்ணீர் காடாக கிடந்த ஏரிகளும், குளங்களும் இன்று வறண்டுபோய் மைதானம் போல காட்சியளிக்கிறது. பொதுமக்களுக்கு குடிநீர் சிறப்பு டேங்கர் ரெயில் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. மாநில அரசும் மக்களுக்கு குடிநீர் வழங்க தீவிர முயற்சியை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுக்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கிடையே சுட்டெரிக்கும் வெயிலும் மக்களை வாட்டி வதைக்கிறது.
இதில் மற்றொரு கொடூரமாக சிறுமி மாரடைப்பால் உயிரிழந்து உள்ளார்.
பீட் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 12 வயது சிறுமி யோகிதா தேசாய் வீட்டிற்கு தண்ணீர் எடுக்க சென்று உள்ளார். 5-வது முறை தண்ணீர் எடுக்க சென்ற போது குடிநீர் குழாய் பகுதியில் விழுந்துவிட்டார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் உயிரிழந்துவிட்டார் என்று கூறிஉள்ளார். சிறுமி மாரடைப்பு மற்றும் உடல் வறட்சியினால் உயிரிழந்து உள்ளார் என்று டாக்டர் கூறிஉள்ளார். மாணவி ஏற்கனவே வயிற்று வலியுடன் இருந்து உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பீட் மாவட்டத்தில் கடந்த ஞாயிறு அன்று குறைந்தபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகிஉள்ளது. ”எங்கள் கிராமத்தில் வறட்சி தலைவிரித்தாடுகிறது. சிறுமி தண்ணீர் எடுப்பதற்காக சென்றார். அப்போது மயக்கம் அடைந்து விழுந்துவிட்டார்,” என்று சிறுமியின் உறவினர் கூறிஉள்ளார். இந்தியாவில் வெப்ப காற்றுக்கு இதுவரையில் 110 பேர் பலியாகி உள்ளனர். கடந்த மூன்று வாரத்தில் மட்டும் ஒடிசாவில் 45 பேரும், தெலுங்கானாவில் 35 பேரும் பலியாகி உள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.